
ஒரு ஏழைச்சிறுவன் பாடசாலை செல்வதற்காய் வீடு வீடாக தன் தாய் தயாரித்து தரும் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தான். விற்பனை நிறைவுக்கட்டத்தில் பசி அவன் வயிற்றை கிள்ளியது.
எதிரே தென்பட்ட வீட்டில் பசிக்கு ஏதேனும் உணவு கேட்க நினைத்து கதவை தட்டியவன் உணர்விழந்து போனான். அங்கே ஒரு அழகான பெண் கதவை திறந்து நின்றுகொண்டிருந்தாள். பசிக்கு உணவு கேட்க வந்தவன் தடுமாறி கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமான்னு கேட்டான். வந்தவன் பசியால் வாடியிருந்ததை உணர்ந்தவள் ஒரு பெரிய பாத்திரத்தில் பால் கொடுத்தாள். நிதானமாக குடித்து முடித்தவன்.
''நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்'' என்றான்.
அதற்கு அந்த கிராமத்து பெண் '' நீங்கள் எனக்கு கடன் பட வேண்டியதில்லை. எப்பொழுதும் கருணைக்கு சம்பளம் பெறக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க'' என்று பதில் சொன்னாள்.
''அப்போ என்னுடைய இதயப்பூர்வமான நன்றியையாவது ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டான்.
தொடந்த அந்த ஏழைச்சிறுவனின் கடின உழைப்பும் படிப்பும் ஒரு பெரிய நகரத்தில் பிரபல வைத்தியர் என்கிற அந்தஸ்தை அவனுக்கு கொடுத்தது.
ஒரு சில வருடங்களுக்கு பிறகு. அந்த கிராமத்து பெண் சுகவீனமுற்றாள். கடும் முயற்சிக்கு பிறகு கிராமத்து வைத்தியர்கள் சிகிச்சையளிப்பதை கைவிட்டுவிட்டனர். அரிய வகை நோயக்கு தகுந்த சிகிச்சையை நகரத்தில் தேர்ந்த ஒரு வைத்தியரிடம் பெற்றுக்கொள்ளுமாறு அவள் அறிவுறுத்தப்பட்டாள்.
அவசரமாக நகரத்தின் பிரபல வைத்தியரிடம் அழைத்துச்செல்லப்பட்டாள் அந்த பெண்.
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரு நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாய் குறித்த வைத்தியருக்கு தகவல் சொல்லப்பட்டது. நோயளியின் முகவரியை பார்த்தவர் சிகிச்சைக்காக விரைந்தார்.
தன் பசிக்கு பாத்திரம் நிரம்ப பால் கொடுத்த அந்த கிராமத்து பெண்தான் அவள் என்பதை பார்த்த பார்வையில் உணர்ந்து கொண்டார். அவளை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு பல நாட்களாக கடுமையாக போரடிய வைத்தியர் வெற்றிபெற்றார்.
இறுதியாக அந்த பெண்ணின் சிகிச்சைகளுக்கான செலவுப்பட்டியல் வைத்தியரின் அனுமதிக்காக வந்தது. அதைப்பார்த்தவர் அந்தப்பட்டடியலின் அடியில் ஏதோ எழுதி கையொப்பமிட்டு அனுப்பி வைத்தார்.
கிராமத்து பெண்ணிடம் அந்த பட்டியல் கொடுக்கப்பட்டது. '' என் வாழ் நாள் முழுவதும் உழைத்தாலும் இதை என்னால் கட்ட முடியாது'' என்று தனக்குள்ளே நினைத்துக்கொண்டு அதை திறந்தாள்.
அவள் கண்ணில் முதலில் பட்டது அந்த பட்டியலின் அடிப்பகுதியில் வைத்தியரின் கையொப்பத்துடன் அடிக்கோடிட்டு எழுதப்பட்ட அந்த சொற்கள்தான்.
''முழுமையாக செலுத்துங்கள், ஒரு பாத்திரம் நிரம்ப பாலை ஊற்றி''
சந்தோசம் அவள் கண்களை மூழ்கடிக்க தெளிவான இதயத்தோடு ''நன்றி இறைவா, உன் அன்பை மனித மனங்களில் பரப்பச்செய்'' என்று வேண்டிக்கொண்டாள்.
சுவரை நோக்கி வீசிய பந்து மீண்டும் நம்மை வந்தடைவது போல நாம் செய்யும் எல்லா நல்ல செயல்களுக்கும் என்றோ ஒரு நாள் பலனை பெறுவோம். பலன் கிடைக்காவிட்டால் உலகை அழகுபடுத்தியதற்காய சந்தோசப்படுவோம்.
இந்த உலகை அன்பு மட்டும் ஆளட்டும். கொடிய யுத்தமில்லாத உலகிற்காய் பிரார்த்திப்போம்.
விரோதி புதுவருடத்தை கொண்டாடுபவர்களுக்கு என் புத்தாண்டு வாழ்தத்துக்கள்.

சில சமயம் நாம் வாசிக்கும் விடயங்கள் நம்மை சிந்திக்க வைப்பதுண்டு... அதை நம் இதயத்தில் இருக்கும் பலரோடும் பகிர்ந்து கொள்ளவும் நாம் மறப்பதில்லை... அதுபோல நம் இதயத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு காதல் கதை...
கண் தெரியாத ஒருத்தி தன் வாழ்க்கையை வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தாள். அவள் வெறுக்காதவை எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
அவள் இந்த உலகத்தில் அன்பு வைத்தது தன் காதலனிடம் மட்டும்தான். அவன் எப்போதும் அவளுக்காகவே வாழ்கிறவன். அவன் விடுகிற ஒவ்வோரு மூச்சும் இவள் பற்றிய சிந்தனையாகத்தான் இருக்கும்.
ஒரு நாள் பார்வையிழந்த அந்த பெண் தன் காதலினிடம் ''எனக்கு மட்டும் பார்வை இருக்குமென்றால் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்'' என்றாள்.
பல நாட்கள் கடந்த இந்த காதல் பயணத்தில் ஒரு முறை யாரோ ஒருத்தர் இவள் பார்வைக்கு கண்களை தானமாக கொடுத்திருந்தார்.
இப்பொழுது அவள் இந்த உலகத்தையே பார்க்கிறாள். அவள் இதயக்கூட்டில் இருக்கும் காதலனை தன் இரு கண் கொண்டு பார்க்கிறாள்.
இந்த உலகத்தை விட தன்னை நேசித்த காதலியிடம் காதலன் ''இப்போ உனக்கு பார்வை வந்துடுச்சி என்னை கல்யாணம் கட்டிக்கிறியா'' என்று கேட்கிறான். திடுக்கிட்டுப்போன காதலி ''கண் தெரியாத உன்னை நான் கல்யாணம் கட்டுவதா? எப்படி சாத்தியப்படும்? '' என்று கோபத்தோடு பதில் சொன்னாள்.
நொறுங்கிய இதயத்தோடு அவன் எழுதிய கடிதத்தின் அடியில்...
''உனக்குள் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிற சந்தோசத்தோடு விடை பெறுகிறேன். என் கண்களையாவது கவனமாகப்பார்த்துக்கொள்.''
வாழ்க்கையின் படிநிலைகள் மாறி உயர்வு பெறும் போது மனித மனங்களும் மாறுவதில்லையா?
எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம் கடந்த பாதையை?
வருத்தங்களில் எம் கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள் எங்கே?
(இப்போது இவளை உலகம் தெரியாதவள் அல்லது கண் தெரியாதவள் என்பதை விட குருடி என்றழைப்பது பொருத்தமென்று ராமசாமி அண்ணே சொல்லச்சொன்னாரு.)
ஒஸ்கார் சென்ற தமிழனுக்கு வாழ்த்துக்கள் கோடி.நீ ஒஸ்கார் சென்றதை விட அதை வாங்கிய பிறகு தமிழில் சொன்ன வார்த்தைகளே உன் தாய்மொழிக்கு நீ கொடுத்த கௌரவம்.
இசைப்புயல் A.R. ரஹ்மான் ஸ்லம் டோக் படத்துக்காக இரண்டு பிரிவுகளில் கடந்த ஞாயிறு(22) விருதுகளை பெற்றுக்கொண்டார்.
11 வயதில் தந்தையை இழந்து தன் குடும்பத்தை கரை சேர்க்கும் உன்னத கனவுடன் தன் திறமையை மாத்திரம் நம்பி களத்தில் இறங்கிய ரஹ்மான் இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றது மாத்திரமல்லாது. தன் நாட்டிற்கும் தன் தாயக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
ஒரு தமிழன் வாங்கிய முதலாவது ஒஸ்கார் விருது. ஒஸ்கார் விருது சர்வதேச அளவில் கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் ஓர் உயரிய அந்தஸ்து. இது அமெரிக்காவில் கொடுக்கப்படுவதால் அமெரிக்கர்களுக்கான விருதாகுமா?
விருது வென்ற தமிழனுக்கு வாழ்த்துச்சொல்ல பல இந்திய தளங்கள் திட்டமிட்டு செயற்பட்டது வருத்தத்திற்குரியது. ரஹ்மான் ஒஸ்கார் விருது பெற தகுதியுடையவரா? இல்லையா? இதுபோன்ற பல கருத்துக்கணிப்புக்கள்.
என் பார்வையில் இந்த விருதை பெற ரஹ்மான் முழு அளவில் தகுதியானவர்.
ஸ்லம் டோக் இது அவருடைய ஒரு சில ஆங்கில படைப்புகளில் ஒன்று. ஆனால் தமிழில் வெளியான ஆயிரக்கணக்கான படைப்புகளில் அவர் தன் திறமையை நிரூபித்ததற்கு கொடுத்திருக்க வேண்டும் நூற்றுக்கணக்காக ஒஸ்கார் விருதுகள்.
ரஹ்மான் என்கிற மனிதரிடம் இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் ஏராளம். விடா முயற்சி, தொழில் மீது கொண்டுள்ள பற்று, உயர்வுகளின்போது காட்டும் தன்னடக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒஸ்கார் வென்ற தமிழனை இனி உலகறியும். படைப்புகள் விற்பனையானதில் இசைப்புயல் ரஹ்மான் உலக இசையமைப்பாளர் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறார். ரஹ்மானின் வயதையும் வேகத்தையும் பார்த்தால் நம்பர் 1 இடத்ததை பிடிக்க ரொம்ப காலம் தேவைப்படாது. இதுவரையில் இவரது அரை பில்லியன் படைப்புகள் விற்பனையாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்லம் டோக் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது உண்மை ஆனால் அதை விளக்கப்படுத்தும் அளவுக்கு மும்பை சமூக கட்டமைப்பை நான் அறிந்ததில்லை. படத்தின்படி அங்கே நடக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒஸ்கார் விருதுக்கு பிறகு முன்பு போர்கொடி உயர்த்திய பலரும் இது இந்திய படைப்பு என்று மௌனமானதுமுண்டு. சிலர் இன்னும் இது இந்தியர்களை அவமானப்படுத்தும் படைப்பு என்று பலவிதமான கருத்துக்களை தெரிவிக்கிறர்கள்.
காதலன் காதலியை சந்திக்கிறான். காதலன் காதலி பிரிகிறார்கள். காதலன் சோகத்தில் பாடுகிறான். காதலி காதலன் மீண்டும் இணைகிறார்கள். இதுதான் இந்திய சினிமா என்று வர்ணித்த பிரித்தானிய சஞ்சிகைகள் ஸ்லம்டோக விருது வென்ற பிறகு தங்கள் நாட்டு படைப்பென்று மார்தட்டிக்கொள்கிறார்கள்.
பாவம் அமெரிக்கர்கள்.பல கோணத்திலிருந்து இவர்களுக்கு பலத்த அடி ஒலிம்பிக் போட்டிகளில் வேகமான மனிதர் அந்தஸ்து தொடங்கி பொருளாதார சரிவு, நிதி நிறுவனங்கள், வாகன உற்பத்தி, வேலையிழப்பு இறுதியாக ஒஸ்காரிலும் சரிவு. இம்முறை ஒரே ஒரு அமெரிக்கர்தான் ஒஸ்கார் விருது வென்றார். இது அமெரிக்க சஞ்சிகைகள் சொல்லும் கதை.