மறக்கக் கூடாத, ஒருபோதும் மன்னிக்கக் கூடாத ஒரு நிஜத்தின் குரல்! 🇵🇸

 Majestic Cineplexஇல் திரையிடப்பட்ட 'The Voice of Hind Rajab' திரைப்படத்தின் பீரிமியர் காட்சிக்கு சென்றிருந்தேன். திரை இருண்டு, விளக்குகள் ஒளிரத் தொடங்கிய கணம்... அரங்கிலிருந்த எவராலும் அத்தனை எளிதாகத் தத்தம் இருக்கைகளிலிருந்து எழுந்துவிட முடியவில்லை. அங்கு நிலவியது வெறும் நிசப்தமல்ல; ஒட்டுமொத்த மானுடமும் தோற்றுச் சிறுத்துப்போனதன் பேரவல மௌனம்!



இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர், இஹாப் ஐ.எம். கலீல் அவர்களுடன்


ஹிந்த் ரஜப்... வெறும் ஆறு வயதே நிரம்பிய சிறுமி. சற்று கற்பனை செய்து பாருங்கள்... ஒரு கார். சுற்றிலும் உறவுகளின்—மாமா, மாமி, அக்கா, அண்ணன் என அத்தனை பேரின்—ரத்தம் தோய்ந்த சடலங்கள். அந்தப் பிணக்குவியலின் நடுவே, உறைந்துபோன பெருவலியோடும் மரண பயத்தோடும் உயிருக்குப் போராடும் அந்தச் சின்னஞ்சிறு மலர், கைகளில் ஒரு செல்பேசியைப் பற்றிக்கொண்டு விம்மி விம்மித் துடிக்கிறாள்:
"என்னை வந்து கூட்டிட்டு போங்க... எனக்கு ரொம்பப் பயமா இருக்கு... யாராவது என்னைக் காப்பாத்துங்க..."
ஒரு மணி நேரமல்ல, பல மணி நேரங்கள். ஒவ்வொரு வினாடியும் ஒரு பெருயுகமென நகர, மரணத்தின் வாயிலில் நின்று அவள் எழுப்பிய அந்த அபயக் குரல் இன்றும் என் ஆன்மாவை உலுக்கிக் கொண்டே இருக்கிறது.
அவள் இருந்த அந்த காரை நோக்கி 350-க்கும் மேற்பட்ட தோட்டாக்களைப் பாய்ச்சி, மனிதாபிமானத்தின் சுவடுகூட இல்லாமல் சல்லடையாகத் துளைத்தெடுத்திருந்தார்கள். உலகமெங்கும் அவளது மரணக் கதறல் ஒலித்துக்கொண்டிருந்த அதே வேளையில், அவளை மீட்கப் புறப்பட்ட செம்பிறைச் சங்கத்தின் (Red Crescent) ஆம்புலன்ஸும் இரக்கமற்றுத் தாக்கப்பட்டது. உயிர்காக்கச் சென்ற அந்த இரு உன்னத மருத்துவச் சேவையாளர்களும் ஆம்புலன்ஸோடு சேர்த்துச் சாம்பலாக்கப்பட்டனர்.
மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டு ஒரு பிஞ்சு உயிர் கதறியும்கூட, அவளைக் காப்பாற்ற இந்தச் சபிக்கப்பட்ட உலகத்தால் முடியாமல் போனது.
இது ஹிந்த் என்ற ஒரு சிறுமியின் துயரம் மட்டுமல்ல. குருதி தோய்ந்த இந்தப் பாலஸ்தீனப் போரில் இதுவரை 70,000-க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இதில் பெருங்கொடுமை என்னவென்றால், பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் பிஞ்சுக் குழந்தைகளுமே. ஒவ்வொரு மரணமும் வெறும் காகிதப் புள்ளிவிவரமல்ல; அவை ஒவ்வொன்றும் ஹிந்தைப் போல ஈவிரக்கமின்றிக் கலைக்கப்பட்ட ஆயிரமாயிரம் அழகிய கனவுகள். இவற்றைக் காணும்போது நெஞ்சம் இன்னும் கனக்கிறது; காரணம், இலங்கை போரின் இறுதித் தருணங்களும் இதுபோல ரத்தம் தோய்ந்த ஆயிரம் கதைகளைச் சொல்லும் என்பதுதான் வலிநிறைந்த நிதர்சனம்.
ஏற்பாடு செய்த இலங்கைக்கான பாலஸ்தீன தூதரகம் (Embassy of Palestine in Sri Lanka), பாலஸ்தீன மக்களுக்கான இலங்கை நட்புறவுச் சங்கம் மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் ஆகியோருக்கு நன்றிகள்.
'The Voice of Hind Rajab' – நாம் மறக்கக் கூடாத, ஒருபோதும் மன்னிக்கக் கூடாத ஒரு நிஜத்தின் குரல்! 🇵🇸💔


'தகவல் யுத்தம்' Information War

 "உண்மை தனது காலணிகளை அணிந்துகொள்வதற்குள், பொய் உலகையே ஒருமுறை சுற்றி வந்துவிடும்" என்பார்கள். இது இன்று வெறும் பழமொழி அல்ல; நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களின் நிதர்சனம்.



இன்றைய அரசியல் என்பது களத்தில் நடக்கும் மோதல் அல்ல; அது உங்கள் அலைபேசித் திரையில் நடக்கும் 'தகவல் யுத்தம்' Information War.

முன்பெல்லாம் ஒரு பொய்யைப் பரப்ப அச்சகங்கள் வேண்டும், தொலைக்காட்சிகள் வேண்டும். இன்று ஒரு WhatsApp Forward அல்லது ஒரு 'Facebook Reel' போதும். அடுத்த பத்து நிமிடங்களில் பல லட்சம் இதயங்களுக்குள் ஒரு நஞ்சை விதைத்துவிட முடியும்.

பொய் என்பது இருட்டில் வளரும் காளான் போன்றது. எங்கே தகவல் வெற்றிடம் இருக்கிறதோ, அங்கே பொய் அரியணை ஏறுகிறது. உதாரணமாக ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்படும்போது, அதன் நன்மைகளைச் சொல்ல உண்மை தடுமாறினால், "இந்தத் திட்டத்தால் உங்கள் சொத்து பறிபோகப் போகிறது" என்று ஒரு பொய் கிளப்பிவிடப்படும். அந்தத் திட்டத்தின் அசல் நோக்கம் உங்களுக்குத் தெரிவதற்கு முன்பே, உங்கள் மனதில் பயம் உட்கார்ந்துவிடும். கோபமும் பயமும் வந்துவிட்டால், மனித மூளையின் தர்க்க ரீதியான பகுதி வேலை செய்வதை நிறுத்திவிடும். இதையே அந்தப் பிரச்சாரப் பீரங்கிகள் விரும்புகின்றன.

உண்மையின் பக்கம் நிற்பவர்களுக்கு Counter-Propaganda கற்றுத்தரும் முதல் பாடம் என்ன தெரியுமா?
ஒரு பொய் முளைக்கும் முன்பே, "அவர்கள் இப்படித்தான் சொல்ல வருவார்கள், ஆனால் உண்மை இதுதான்" என்று முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும். இதுவே இன்றைய காலத்தின் மிகச்சிறந்த தற்காப்பு. இதைத்தான் 'Pre-bunking' என்று செல்வார்கள். அதாவது, நோய்த்தொற்று வந்தபின் சிகிச்சை பெறுவதை விட, அது வராமல் இருக்கத் தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றது.

அதே நேரம் பிரச்சார பீரங்கிகளின் வலையில் சிக்காமல் இருக்க ஒரு செய்தி நம்மை அதீத கோபத்திற்கோ அல்லது பயத்திற்கோ உள்ளாக்கினால், அதை Share செய்வதற்கு முன் ஐந்து நிமிடம் பொறுத்திருக்க வேண்டும். ஏன் என்றால் அந்த உணர்ச்சிதான் பொய்யின் முதலீடு. உங்களுக்கு ஞாபகம் இருக்கும் குர்பானை அரசு தடை செய்தது என்ற செய்தி எத்தனை பேரை பொங்கி எழச்செய்தது என்று.

அதனால் யார் சொன்னார்கள்? ஏன் இப்போது சொல்கிறார்கள்? இதனால் யாருக்கு லாபம்?" - இந்த மூன்று கேள்விகள் எந்த ஒரு பிரம்மாண்டமான பொய்யையும் உடைத்துவிடும்.

பொய் பரவுவதற்கு 10 நிமிடம் போதும். ஆனால், சிதைக்கப்பட்ட உண்மையை மீட்டெடுக்க 10 நாட்களோ அல்லது 10 ஆண்டுகளோ கூட ஆகலாம். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் அடைந்த மன உளைச்சலில் இருந்து மீள எத்தனை காலம் எடுத்தது.

விழிப்புணர்வே முதல் வெற்றி!
#MediaLiteracy #CounterPropaganda #SocialMediaAwareness #HishamM
See less

Comments


தேங்காயும் தேயிலையும்: சிம்மாசனத்திற்கான யுத்தம்! 🥥☕

"இலங்கையின் அடையாளம் எது?" என்று யாராவது கேட்டால், காலம் காலமாக நம்மிடம் இருந்த பதில் 'தேயிலை'. ஆனால், இப்போது தென்னங்கீற்றுகளின் சலசலப்பு அந்தச் சிம்மாசனத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறதா?
சமீபத்திய ஏற்றுமதித் தரவுகள் (Jan-Apr 2026) ஒரு சுவாரஸ்யமான கதையைச் சொல்கின்றன. நமது தேயிலை 451 மில்லியன் டாலர்களை ஈட்டித் தந்து முதலிடத்தில் கம்பீரமாக நிற்கிறது. ஆனால், அதற்குச் சற்றும் சளைக்காமல் தேங்காய் சார்ந்த பொருட்கள் 406 மில்லியன் டாலர்களை அள்ளி வந்து அதன் தோளுக்குப் பின்னால் வந்து நிற்கின்றன.

வெறும் 45 மில்லியன் டாலர்கள் தான் இடைவெளி! ஒருவேளை, மிக விரைவில் தேயிலையைக் கடந்து தேங்காய் முதலிடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உங்களுக்குத் தெரியுமா? கடந்த 2025-ஆம் ஆண்டு நமது தேங்காய் ஏற்றுமதி வரலாற்றில் ஒரு பொற்காலம். அந்த ஆண்டின் முதல் 10 மாதங்களிலேயே தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ($1 Billion) கடந்து சாதனை படைத்தது.
இது ஏதோ தற்செயலாக நடந்த விளைச்சல் உயர்வு மட்டுமல்ல; இது ஒரு 'Structural Shift' எனப்படும் பாரிய கட்டமைப்பு மாற்றம். இன்று உலகச் சந்தையில் தேங்காய் எண்ணெய் (Coconut Oil), தேங்காய் நீர் (Coconut Water) மற்றும் தேங்காய் மாவு (Coconut Flour) ஆகியவற்றுக்கான தேவை தீயாய் கொதிக்கிறது. உலகத்தரம் வாய்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகள் மூலம் இலங்கை அந்தத் தேவையை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
ஆனால், இங்கே நாம் கவனிக்க வேண்டிய நிஜமான செய்தி இதுவல்ல...
இது வெறும் இரண்டு துறைகளுக்கு இடையிலான போட்டி மட்டுமல்ல; இது சரிந்து கிடந்த ஒரு தேசம் மெல்ல நிமிர்ந்து நிற்கும் கதை. 2024-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 5.1 பில்லியன் டாலர்களாக இருந்தது. இன்று, இரண்டே ஆண்டுகளில் அது 5.7 பில்லியன் டாலர்களைத் தொட்டிருக்கிறது.
600 மில்லியன் டாலர் கூடுதல் வருமானம் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. ஆடைத் தொழில் (Apparel), தகவல் தொழில்நுட்பம் (ICT), பெட்ரோலியம், ரப்பர் என எல்லாத் துறைகளும் ஒரே நேர்க்கோட்டில் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
ஒரு நாடு பொருளாதார நெருக்கடியின் இருண்ட பக்கங்களிலிருந்து மீண்டு, வெளிச்சத்தை நோக்கிப் பயணிக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறந்த சாட்சி வேறென்ன வேண்டும்?
தேங்காய் தேயிலையை முந்துமா என்பதைத் தாண்டி, நம் தேசம் உலகச் சந்தையில் தனது இழந்த பெருமையை மீண்டும் மீட்டெடுக்குமா என்பதே இன்றைய முக்கிய கேள்வி

புதையல் மேல் அமர்ந்திருக்கும் தேசமும்... ஒரு புதிய விடியலும்! 🔋☀️

 "தயவுசெய்து உங்கள் வீட்டு சோலார் (Solar) இணைப்பைத் தற்காலிகமாக நிறுத்துங்கள்" –

வார இறுதி நாட்களில் மின்சார சபையிடமிருந்து (CEB) இவ்வாறான ஒரு குறுஞ்செய்தி
Solar பயன்படுத்தும் பலரின் அலைபேசிக்கும் வந்திருக்கலாம்.
அள்ளித் தரும் இயற்கை வளங்களை மடியில் வைத்துக்கொண்டு, அதை எப்படிப் பயன்படுத்துவது
என்று தெரியாமல் ஒரு பெரும் புதையலின் மேல் அமர்ந்திருக்கும் தேசம் நம்முடையது.
ஆண்டு முழுவதும் தாராளமாகக் கிடைக்கும் சூரிய ஒளி நமக்கு ஒரு வரப்பிரசாதம்.
ஆனால், அந்த மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் நவீனக் கட்டமைப்பு நம்மிடம் இதுவரை
இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.


ஏன் இந்த 'Switch Off' குறுஞ்செய்திகள்? 🤯
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பெரும் தொழிற்சாலைகள் இயங்குவதில்லை. அந்த
நேரங்களில் நம் வீடுகளில் உற்பத்தியாகி தேசிய
மின்கட்டமைப்புக்கு (National Grid) பாயும்
அதிகப்படியான மின்சாரத்தைப் பயன்படுத்த ஆளில்லாமல் போய்விடுகிறது.
தேவையற்ற மின்சாரம் திடீரென அதிகரித்தால் ஒட்டுமொத்த
மின்கட்டமைப்பும் பழுதடைந்துவிடும் அபாயம் உண்டு.
இலவசமாகக் கிடைக்கும் சூரிய சக்தியை கூட சேமிக்க வழியில்லாமல், அதை வீணாக்குவதைத்
தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் இதுவரை நாம் இருந்தோம். இடையில் ஒரு
குரங்கு பாய்ந்ததால் மின்தடை ஏற்பட்ட கதையெல்லாம் கூட நாம் கேட்டிருக்கிறோம்.
40 பில்லியன் ரூபாயும்... ஒரு புதிய சகாப்தமும்! 🚀
இந்தத் தொழில்நுட்பத் தேக்கநிலைக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க, ரூ. 40
பில்லியன் மதிப்பிலான மாபெரும் 'பேட்டரி சேமிப்புத் திட்டம்' (BESS)
இப்போது இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
இதன் முதற்கட்டமாக, 20 மெகாவாட் கொள்ளளவு கொண்ட பிரமாண்டமான பேட்டரி தொகுதிகள்
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இது நம் நாட்டின் மின்சக்தி
வரலாற்றில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாக அமையக்கூடும்.
இந்த பேட்டரிகள் என்ன செய்யும்? 🔋💡
பகலில் தாராளமாகக் கிடைக்கும் சூரிய ஒளியில் உற்பத்தியாகும் அதிகப்படியான
மின்சாரத்தை இந்த பேட்டரிகள் தன்னுள் சேமித்துக்கொள்ளும்.
பின்னர், மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கும் இரவு நேரங்களில் (Peak
Hours), சேமிக்கப்பட்ட இந்த சுத்தமான மின்சாரத்தை நமக்கு வழங்கும்.
இதன்மூலம், இரவு நேரங்களில் அதிக விலை கொடுத்து டீசல் அல்லது நிலக்கரி மூலம்
மின்சாரம் தயாரிப்பது பெருமளவு குறையும். இதனால் நாட்டின் பணம்
மிச்சமாகும்; நமக்கும் தடையற்ற, பசுமையான மின்சாரம் கிடைக்கும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் 2015-லேயே எட்டிய இந்த 'Grid-scale Battery'
தொழில்நுட்பத்தை, நாம் இப்போதுதான் எட்டியிருக்கிறோம். கொஞ்சம் தாமதம் என்றாலும்,
உலகத் தொழில்நுட்பத்தோடு இப்போதுதான் நாம் கைகோர்த்திருக்கிறோம்.
காலி மற்றும் மாத்தறையில் ஆரம்பிக்கப்படும் இத்திட்டம், விரைவில் நாடு முழுவதும்
உள்ள 16 பிரதான துணை மின் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

நமது கடல்... ஒரு மாயையும், நங்கூரமிட்ட உண்மையும்! 🚢🌊

 "நம்ம நாட்டைச் சுத்தி கடல் இருக்கு, அதனால மீன்களுக்குப் பஞ்சமே இல்லை... நினைச்ச நேரமெல்லாம் வலை விரிச்சு மீன்களை அள்ளிக்கிட்டே இருக்கலாம்" - இப்படித்தான் நம்மில் பலரும் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நிதர்சனம் நாம் நினைப்பது போல அத்தனை அழகானதல்ல.

சமீபத்தில் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றிருந்தபோது, 32 நாட்கள் நீடித்த ஒரு நீண்ட ஆய்வை முடித்துவிட்டு நங்கூரமிட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான கப்பலைப் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அதன் பெயர் R/V Dr. Fridtjof Nansen. ஐக்கிய நாடுகளின் கொடி பறக்க, கம்பீரமாக நின்றிருந்த அந்த இராட்சத கப்பல் சொன்ன கதைகள் பல.


விந்தையான விஷயம் என்னவென்றால், அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையிலான அந்தப் போர் பதற்றம் மட்டும் இல்லாதிருந்தால், இந்தக் கப்பல் இலங்கை மண்ணிற்கு வந்திருக்கவே வாய்ப்பில்லை. உண்மையில் இது ஓமன் கடலுக்குச் செல்ல வேண்டியது. அங்கே நிலவிய பாதுகாப்பற்ற சூழலால், அதன் திசை மாறி நம் நாட்டிற்கு ஒரு வரப்பிரசாதமாக வந்து சேர்ந்தது.
உலகளவில் சுமார் 90 சதவீத கடல் மீன் வளங்கள் இப்போது 'அளவுக்கு அதிகமாகப் பிடிக்கப்பட்டு' (Over-fished) அல்லது முற்றாக அழிந்து (Depleted) போய்க்கொண்டிருக்கின்றன. நம் கடலடியில் என்ன நடக்கிறது, இன்னும் எவ்வளவு மீன்கள் மிச்சமிருக்கின்றன என்ற எந்தத் தரவுகளும் (Data) நம் அரசாங்கத்திடமும் இல்லை, மக்களாகிய நமக்கும் தெரியாது.
இந்தக் கப்பல் கடந்த 32 நாட்களாக எமது நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) சுற்றித் திரிந்து, மீன் வளம் எங்கே செறிவாக இருக்கிறது, கடல் நீர் எவ்வளவு சூடாகியிருக்கிறது, நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) கடலை எந்தளவுக்குக் பாதித்திருக்கிறது என அத்தனையையும் நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறது Dr. Fridtjof Nansen கப்பல்.
நோர்வே நாடும், FAO அமைப்பும் இணைந்து சுமார் 1 மில்லியன் டொலர்களை இதற்காகச் செலவிட்டிருக்கிறார்கள். இந்த ஆய்வில் இலங்கை விஞ்ஞானிகளும் பங்கேற்றனர், அதிலும் குறிப்பாகப் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு மிக அதிகம் என்பது நமக்கெல்லாம் பெருமை.
துறைமுகத்தில் நின்று அந்தப் பிரம்மாண்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்றுதான் தோன்றியது... இன்று நம் கண்ணுக்குப் புலப்படாத இந்தத் தரவுகள்தான், நாளை நம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், எமது எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றன.