பதிவுலகும் ஊடகத்துறையும் நானும் (பதிவு 01)

AM 11:43 Hisham Mohamed - هشام 14 Comments


பதிவெழுத ஆரம்பிச்ச பிறகு எனக்குள்ள கொஞ்சம் பக்குவம் தெரியுது. முன்பெல்லாம் எதெற்கெடுத்தாலும் அவசரப்படும் என்னோட புத்தி இப்போ பிரேக் அடிச்சு நின்னு நிதானமா யோசிக்க ஆரம்பிச்சிடுச்சி. நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்கும் என் ஆழ் மனதில் ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை அனுமதி வாங்கிக் கொள்கிறேன். ஒவ்வொரு பதிவும் என்னுடைய உள் மனதின் வெளிப்பாடுகள் என்பதால் என்னுடைய உள் மனது சராசரி ஒருவரின் பார்வையில் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதை பின்னூட்டங்கள் வழியாக தெரிந்து கொள்கிறேன்.


பின்னூட்டங்கள் உண்மையாக ஊட்டச்சத்துக்கள்.


ஒவ்வொரு பதிவரின் பதிவுக்கும் கிடைக்கிற பின்னூட்டங்கள் உண்மையாக ஊட்டச்சத்துக்கள். நான் பதிவெழுத ஆரம்பித்த நாட்களில் என்னை ஊக்கப்படுத்தி பதிவுலகின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் சொல்லிக்கொடுத்த பாபு, கோவி கண்ணன் மற்றும் பல நண்பர்களையும் என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் மனம் திறந்து சார்பாகவோ சார்பற்ற விதத்திலோ தங்கள் கருத்துக்களை சொல்லும் நண்பர்களுக்கும் பதிவுலகில் என்னை தொடரும் கலைக்குமார், KT.Sarangan, Ilangan போன்ற நண்பர்களுக்கும் எனது நன்றிகள். என்னுடைய பதிவுகளை பதிவுலகம் பார்ப்பதற்கு முதல் இரண்டு பேரை வட்புறுத்தி படிக்கச் செய்து கருத்தறிவதுண்டு. ஒருவர் அண்மையில் என்னுடைய சாதனையை முறியடித்த சக பதிவர் லோஷன். எனக்கும் அவருக்கும் இடையில் ஒரு போட்டி இருக்கு ஒரு நாளில் எத்தனை பேர் தளத்தை பார்வையிடுகிறார்கள் என்ற போட்டி. (மூனு பதிவெழுதி சாதனை படைத்ததையும் பதிவெழுதாம சாதனை படைத்ததையும் யாருக்கும் சொல்ல மாட்டேன். வேணும்னா லோஷனிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.) அடுத்தவர் மேடோனா அக்கானு அன்போடு அழைக்கும் அருந்ததி அக்கா. என்னுடைய பதிவுகளின் பின்னனி இது.


பதிவுகளால் நான் வருந்திய பொழுதுகள்.


சில சந்தர்ப்பங்களில் அநாதையாக பெயர் குறிப்பிடப்படாமல் வருகிற மோசமான மொழி அறிந்தவர்களின் பின்னூட்டங்கள் மனசுக்கு கொஞ்சம் கவலை தந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இருந்தாலும் நான் கவலைப்படுவதன் மூலமாக குறித்த அநாதையின் மோசமான பின்னூட்டத்தின் நோக்கத்தை நிறைவு செய்யக்கூடாது என்கிற காரணத்திற்காக மனதை தைரியப்படுத்திக்கொள்வதுண்டு. (அநாதை என்று விழித்ததற்கு காரணம் அவர்கள் பெயர் சொல்ல கூச்சப்படும் கேவலமான மொழி அறிந்தவர்கள்.) சில பின்னூட்டங்கள் குறி பார்த்து சுடுவதை போல இன ரீதியான தாக்குதல்கள். ஜம்பதை தாண்டும் என்னுடைய பதிவுகளின் முடிவில் ஒரு விடயத்தை மாத்திரம் தெளிவாக புரிந்து கொண்டேன். என்னுடைய பெயரை வைத்துதான் என் பதிவுகளுக்கு அர்த்தம் சொல்கிறார்கள் சிலர்.

சில கேவலமானவர்களின் சில பின்னூட்டங்கள் (அநுதாபம் தேடும் நோக்கத்தோடு பதியவில்லை). இவர்களுடைய ISP முகவரி Stat Counter இல் பதிவாகியுள்ளது.


அட பல பேருக்கு பிறந்த முஸ்லீம் நாய்களே....!!! 

Posted by Anonymous to Hisham Mohamed at December 27, 2008 2:11 PM


Anonymous said...
dai sony............................vaaya muududaa
October 24, 2008 5:17 PM



கண்ணீருடன் அன்னை வானொலியின் வாசலில் நான்


பதிவுலகில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வேளை என்னோட தோழி வைதேகி (வெற்றி அறிவிப்பாளர் ரொம்ப நல்லவங்க) நான் கண்ணீருடன் அன்னை வானொலியின் வாசலில் நின்று கொண்டிருந்த கதையை சிரித்துக்கொண்டே ஞாபகப்படுத்தினாள். சந்தோசமாக ஒத்துக்கொண்டேன். ஏன் என்றால் நான் காக்கா புடிச்சோ பின்வாசல் வழியாகவோ ஊடகத்துறைக்கு வரவில்லை. இது என்னுடைய பல நாள் கனவு, உழைப்பு. இன்று நான் உழைக்கும் ஒவ்வொரு ரூபா காசும் வியர்வை சிந்தி உழைக்கிறேனோ இல்லையோ அவை என்னுடைய திறமைக்கு கிடைக்கும் சன்மானம் என்று நினைக்கிறேன்.(வியர்வை சிந்தி உழைக்கனும்னு ரொம்ப நாள் ஆசை காத்திருக்கிறேன் சந்தர்ப்பத்திற்கு)
இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் தெரிவுக்காக விண்ணப்பித்திருந்தேன். நேர்முகத்தேர்வில் பங்குபற்றுவதற்கான கடிதம் என் வீட்டுக்கதவை தட்டியது.(இன்னும் அந்த கடிதத்தை பத்திரமா வெச்சிருக்கேன்)

முதல் முறை இலங்கை வானொலிக்கு கண்டியில் இருந்து அதிகாலையில் புறப்பட்டேன். நிறைய எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் கொழும்புக்கு செல்கிறேன். சரியாக இடத்தை கண்டுபிடித்து இலங்கை வானொலியை அடைய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. வரவேற்பரையில் காத்திருந்தேன் ஒவ்வொருவராக குரல் தேர்வுக்காக போய் வருகிறார்கள். அப்போது குரல் தேர்வை நடத்தும் மூத்த அறிவிப்பாளர் ஒருவர் வெளியில் வந்தார். அவரிடம் நடந்ததை சொல்லி கடிதத்தை காட்டினேன்;. அவர் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் பல கனவுகளோடு வந்த எனக்குள் ரிச்டரில் கூட அளக்க முடியாத அளவு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ''எங்க படுத்து கெடந்துட்டு வாறிங்க. வெளியில போ உனக்கெல்லாம் வாய்ப்பு தர முடியாது''. என்று சொல்லிவிட்டார். கெஞ்சிக்கேட்டேன் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. நான் தாமதித்து வந்திருக்க கூடாது அதற்கான உண்மையான காரணத்தை அவர் ஏற்றுக்கொள்ளாதது பெரும் வேதனை அளித்தது. ஒரு வேளை அரசியல்வாதியின் கடிதம் இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரோ என்னவோ. இலங்கை வானொலிக்கு முன்னால ஒரு மாமரம் இருக்கு அதுக்கு கீழ நின்னுகிட்டிருந்தேன்(இன்றும் அந்த மாமரத்த பார்த்தால் எனக்கு அந்த ஞாபகம் வரும்). வீட்டில் இருந்து புறப்படும் போது கண்ட கனவுகள் எல்லாம் ஒவ்வொன்றாக என்னை கேலி செய்த வேதனை என்னை அறியாமலேயே கண்ணீரை வர வச்சிடுச்சி. அப்போ அந்த வழியா இரண்டு பேர் தமிழ்ல கதைச்சுகிட்டு வந்தாங்க யாருன்னு தெரியல இதுக்கு முதல்ல பார்த்ததும் இல்ல. கண்ணீரில் மூழ்கிப்போன என்னிடம் வந்து எதுக்காக அழுறீங்கன்னு விவரம் கேட்டாங்க நடந்ததயெல்லாம் சொன்னேன். ஒருத்தர் திரு ஜெயக்கிருஷ;ணா மற்றவர் திரு சந்திரமோகன் ரெண்டு பேரும் மேல் அதிகாரிகளோட கதைச்சு நேர்முகப்பரீட்சையில் தோற்ற எனக்கொரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தாங்க. நம்பிக்கையோடு முகம் கொடுத்தேன் நடந்த மூன்று கட்ட தெரிவிலும் அதிக புள்ளிகளை பெற்று முதலாவதாக தெரிவானேன். அதற்கு பிறகு பலரும் சோதனைக்காலமாக நினைக்கும் பயிற்சிக்காலம். இலங்கை வானொலியில் வந்த உடனே ஒலி வாங்கியை கையில கொடுத்து அறிவிப்பு செய்யச் சொல்ல மாட்டாங்க அதற்கு பல படிமுறைகள் இருக்கு. 7 மாத கால பயிற்சி............................


பயிற்சியின் தொடர்ச்சி நேரம் கிடைக்கும் போது அடுத்த பதிவில்....
தொடரும்.

யேசு நாதர் கிருஷ்ணபரமாத்மா புத்தர் நபிகள் நாயகம் இவர்கள் நேசித்த ஒன்று............

PM 2:34 Hisham Mohamed - هشام 5 Comments



கிறிஸ்மஸ் தினத்தில் என்னுடைய நாள் காலைப்பொழுது நேத்ரா TV இல் காலை விடிவெள்ளி சிறப்பு நிகழ்ச்சியோடு ஆரம்பமானதில் கோடி சந்தோசம். கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லவில்லையென்று எந்தவொரு நண்பரும் என்னை கோபிக்க முடியாது எல்லாருக்கும் டிவியில் வாழ்த்து சொல்லிட்டோம்ல. கிறிஸ்மஸ் காலை சிறப்பு நிகழ்ச்சியில் மன்னிப்பு என்ற தலைப்பை வழங்கியிருந்தோம். ஏராளமான நண்பர்கள் தொகுப்பாளர்களை கதைக்க விடாமல் கருத்து சொன்னதால டயட் இல்லாம நிகழ்ச்சி செய்த திருப்தி.


யேசு நாதரிடம் இருந்த உயிரிய பண்புகளில் ஒன்று.....

கிருஷ்ணபரமாத்மா வலியுறித்திய பண்புகளில் ஒன்று.....

நபிகள் நாயகம் போற்றிய பண்புகளில் ஒன்று....

புத்தர் போதித்த பண்புகளில் ஒன்று....


மன்னிப்பு.


இது கடவுளின் பண்பு. இதனாலதான மன்னிக்கிறவன கடவுள்னு சொல்றாங்களோ. இந்த உயரிய பண்பு எல்லா புத்திஜீவிகளுக்கும் வராது. எத்தனை புதுவருடங்கள் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் எங்கள மாத்த முடியாது. நாங்க எதுக்கு அவன்கிட்ட மன்னிப்பு கேட்கனும் இப்படி சொல்கிறவர்கள் எதை சாதிச்சதா நினைச்சு பெருமை பட்டுக்கொள்றாங்களோ தெரியல.மன்னிக்கிறதால என்ன குறைஞ்சு போயிடும்னு பயப்பட்றிங்க. உங்க எதிரிகளுக்கு உங்களால கொடுக்கக்கூடிய பெரிய தண்டனை மன்னிப்பு. மன்னிப்பை போல ஒரு தண்டனை இருக்க முடியாது சீசர் சொல்லியிருக்கிறார்.


தன்னை காட்டிக் கொடுத்த சீடனை கூட மன்னித்த மாமனிதர் யேசு பிறந்த இந்த நாளில் உலகம் கொண்டாடும் கிறிஸ்மஸ் தினத்தில் உலக மக்கள் எல்லாருக்கும் பணிவாக நான் கேட்டுக் கொள்வது என்னான்னா மன்னிப்போம் மறப்போம்.


இன்னைக்கு யாராவது கேக் மற்றும் பலகாரம் ஏதாவது கொண்டு வந்து தாரதா இருந்தா மாலை 6.30க்கு முதல்ல கொண்டுவாங்கப்பா. நான் என்றால் இதுவரைக்கும் யாருக்கும் பண்டிகை பலகாரம் கொடுத்ததில்லை ஏன்னா அப்படி கொடுத்தா உலகத்துல இருக்கிற எல்லா பண்டிகைக்கும் இல்ல கொடுக்கனும். அது நான் பெற்ற பாக்கியம். பொதுவாக வானொலி தொலைக்காட்சி தொகுப்பாளராக கடமையாற்றும் ஒருவர் எல்லா பண்டிகையையும் கொண்டாட வேண்டியது கடமை.


பொருளாதார சிக்கல்கள் நீங்கி, பயங்கரவாதம் அடியோடு அழிந்து, உலகெங்கும் சமாதானமும் சந்தோசமும் நிலைத்திருக்க எல்லோருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.


பி.கு - பிறக்கப்போகும் புது வருடத்தில் பதிவுலகத்திற்கு பாசத்தோடு சொல்கிறேன். மதச்சார்பான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இரண்டு இனத்தவர்கள் முட்டி மோத களம் அமைக்கும் விதமான பதிவுகளை தவிர்ப்போம். இனச்சார் மதச்சார் நிறச்சார் கொள்கைகளை ஒழித்து புதுவருடத்தில் புதிய சிந்தனைகளை பதிவுலகம் பதிய முன்கூட்டிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு நீள்காற்சட்டை அணிய தடையா?

PM 2:54 Hisham Mohamed - هشام 3 Comments


இலங்கையின் கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரனவக்கவுக்கு,

பஞ்சத்துல அடிபட்ட பரதேசி பாசத்துடன் எழுதிக்கொள்வது. ஐயா நான் உங்களுக்கு ஓட்டு போட்டதில்ல. ஆனா நீங்க எனக்கு ஒரு சூப்பர் ஹீரோ. உங்களுடைய ஒவ்வொரு சிந்தனையும் செயலும் சாய்வு கோபுரம் போல் இலங்கையின் புகழை உலகத்திற்கே கொண்டு செல்லும்.

ஐயா உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கு தேவை. நீங்க இந்த நாட்டின் முதுகெலும்பு. இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் அவர்களுடைய கலாச்சார விழுமியங்களை அடியோடு ஒழித்துக்கட்ட தனித்து நின்று போராடுகிற ஒரு வீரன். பள்ளிவாசல்களில் ஐவேளை தொழுகைக்கான அழைப்பை விடும் ஒலிபெருக்கிகளுக்கு மாத்திரம் தடையை ஏற்படுத்திய மாவீரன் ஐயா நீங்கள். அடுத்து முஸ்லிம் பாடசாலை பெண்கள் அணியும் நீள்காற்சட்டைக்கு ஆப்பு வைக்க போறிங்களாமே. ஜயா நீங்க வேணும்னா பாருங்க இதுக்காகவே வேடுவ இனத்தவங்க உங்களுக்கு பெரிய ஒரு கௌரவிப்பு விழாவே நடத்தப்போறாங்க. (அடுத்தது ஹிஜாப்தானே அதுதான் தலையில கட்டுவாங்க).


இப்படி நல்ல சமாசாரங்களா பன்னுற உங்கள பாத்து பிச்சு மணி கேட்டான் பாருங்க ஒரு கேள்வி.'' உலக பொருளாதாரம் சரிந்து விழுகிற தருவாயில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிற தருவாயில் பெற்றோல் விலை குறையுமா குறையாதா என்கிற தருவாயில் எப்படி ஐயா உங்களால் மாத்திரம் இப்படி மொக்கை சிந்தனைகளை கொண்டு வர முடிகிறது'' என்று கேட்குறான் மடப்பய அவனுக்கெப்படி புரியம். நீங்க பன்னுங்கய்யா நாங்க எப்பவும் உங்க கூடதான் எங்களுக்கு மான் கராத்தே எல்லாம் நல்லா தெரியும்.


ஐயா கை கழுவாம சாப்பிடுறவன் எத வேணும்னாலும் சொல்லட்டும். கடைசியா நீங்க கொண்டு வரப்போற நீள்காற்சட்டை தடை சூப்பர் பாடசாலை பசங்கெல்லாம் ஒரே குஷியா இருக்காங்கன்னு கஞ்சா சொல்றான். அத விட சந்தோசமான ஒரு செய்தி நம்ம பூந்தி பாய் போராட்டம் நடத்தப்போறாராம். இது சந்தோசமான போராட்டம் நீங்க கொண்டு வரப்போற இந்த சட்டத்தை இலங்கை முழுவதும் கொண்டுவரணும் என்றும் அதிலும் குறிப்பாக பெண்கள் நீள்காற்சட்டை போடக்கூடாதுன்னு கொண்டு வரணுமாம். அப்பதான் சாமி நாடே சிக்கனமா வாழ கத்துக்கும். அதுக்கப்புறம் பாருங்க கொலை கற்பழிப்பு எல்லாம் எப்படி குறையுதுன்னு. அந்த போராட்டத்துல உங்கள ஒருத்தன் உலக நாயகன்னு சொல்லிட்டாங்கய்யா சந்தோசத்துல அவன மேஞ்சிட்டாய்ங்க. ஏன்னா நீங்க என்ன உலக நாயகன் மாதிரி ஒம்பது பொன்னாட்டியா வைச்சிருக்கிங்க. ஐயா நீங்க நல்லவரு .

என்னதான் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு சமாசாரத்தை கொண்டு வரும்போது. நம்ம ஐடியா மணியையும் நீங்க கூப்பிட்டிருக்கனும். அவன் எவ்வளவு மேட்டர் வைச்சிருக்கான் தெரியுமா. அவன் சொல்றான் நயன்தாராவ உங்கட ஆலோசகராக்கியிருக்கணுமாம். ஏன்னா இந்த ஆடை விசயத்துல ரொம்ப சிக்கனம் பேண்றவங்க இவங்கதான். நிறைய சமாசாரங்கள சொல்லி கொடுத்திருப்பாங்கய்யா. அப்புறம் நம்ம ஊர் முக்கோண தொலைக்காட்சியில நடத்துற டான்சிங் ஸ்டார் மாதிரி நிகழ்ச்சிகள்ல வார பெண்களின் உடையை எல்லாருக்கும் கட்டாயப்படுத்தியிருக்கணுமாம். சாமி நீங்க நாலு எழுத்த படிச்சவங்க தப்பா ஏதும் சொல்லி இருந்தா மன்னிச்சுகிங்க.




கலாசாரம் சம்பிரதாயம் எல்லாம் எவனோ ஒருத்தன் உருவாக்கினது தானே அத நம்ம சீங்கம் நீங்க உருவாக்கினா என்ன. முஸ்லிம் அமைச்சர்ட மகளே நீள்காற்சட்டை இல்லாம போறப்போ இவனுங்களுக்கு என்னவாம்.

ஐயா இப்பதான் சீனாக்காரிகள் நம்ம நாட்டுக்கு வந்திருக்காங்க இன்னும் பலபல சமாசாரங்கள கொண்டுவாங்க அப்புறம் பாருங்க பேங்கொக்,இந்துனேசியா,சோமாலியான்னு கலக்கப்போறோம்.

சம்பிக்க சிந்தனை வாழ்க!!!!!

இப்படிக்கு,

கிறிஸ்மசிற்கு தேவாலயத்திற்கு பெய்ன்ட் அடிச்சு பொங்கல் கொண்டாடப்போகும் உண்மையான முஸ்லிம்.
Check Spelling
பி.கு - இப்படியான சமாசாரத்திலாவது அமெரிக்காவ முந்தப்போரத நினைச்சா பெருமையா இருக்கு.

''நாயே இது உனக்கு நாங்கள் கொடுக்கும் கடைசி முத்தம்'' - ஸெய்தி

PM 9:47 Hisham Mohamed - هشام 2 Comments

அன்புள்ள ராமசாமியின் மின்அஞ்சலை நாகரீகம் கருதி சில சென்சாருக்கு பிறகு U சான்றிதழோடு உங்கள் பார்வைக்கு தருகிறேன்(அடைப்புக்குள் நான்)..



உலகத் தலைவன் என்று தன்னை தானே அழைத்துக்கொள்ளும் பெருமிதம் பிடித்த கொலைக்காரன் சப்பாத்துக்களால் அடிவாங்கியது உலக வரலாற்றில் சந்தோசமான ஒரு பதிவு. அதில் ஒரு சப்பாத்தாவது அவன் முகத்திரையை கிழித்திருக்கக்கூடாதா?
(என்ன இருந்தாலும் அவர் ஓரு நாட்டின் தலைவர் இல்லையா இப்படியா நடந்து கொள்வது )

Muntadar-al-Zaidi

தனித்து நின்று போராடிய ஈராக் டிவி நிருபர் ஸெய்தியின் தில் கூட்டமாக வந்த கொலைக்காரனின் பாதுகாவலர்களுக்கு என்றும் வராது. கூட்டு சேர்ந்து ஸெய்தியின் கை கால்களை முறிக்கவும் முகத்தில் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தவும் தான் அவர்களால் முடியும். அரபுலகில் ஸெய்தி இப்பொழுது ஒரு தேசபக்தனாக போற்றப்படுகிறான். (ஆளாலுக்கு உசுப்பேத்தி அவன் குடும்ப வாழ்க்கையை நாசமாக்கிடாதிங்கப்பா)

படம் - அமெரிக்காவிற்கு ஈராக் கொடுத்த பரிசு.

வல்லரசு தலைவன் அவனுடைய ஆட்சிக்காலத்தில் விதைத்தவற்றை பிரியாவிடையில் பெற்றுக்கொண்டான். இவன் மீது வீசப்பட்ட சப்பாத்துக்களை பல கோடிகளை கொடுத்து ஏலத்தில் எடுக்க பலரும் தயாராகி வருகின்றனர்.
(உலக பொருளாதாரத்தின் ஆணிவேராக இருந்த எங்கள் உலக தலைவருக்கு என்னதான் கோபம் இருந்தாலும் ஈராக் செய்தது அவ்வளவு நல்லதாக படவில்லை. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்திருக்கலாம்தானே)


சதாமை இலக்கு வைத்து யுத்தத்தை ஆரம்பித்தவன் சதாமை கொன்ற பிறகும் ஈராக்கின் ரத்தத்தை இன்னும் ருசிபார்ப்பதேனோ?
(ஸெய்தி போன்றவர்களை விட்டு வைக்க கூடாது பாருங்கோ)


ஈராக் பெண்களின் கற்பை பறிக்கவும் சிறுபிள்ளைகளின் ரத்தத்தை குடிக்கவும் இன்னுமொருவன் ஈராக் மண்ணில் காலடி எடுத்த வைக்க அஞ்சமாட்டானா?


ஈராக்கின் புழுதி படிந்த சப்பாத்து தாக்குதலை விட கேவலமான ஒரு தாக்குதலை துப்பாக்கி ரவைகள், க்ளஸ்டர் குண்டுகள், விமானத்தாக்குதல்கள் ஏற்படுத்த முடியுமா?
(ஈராக் சப்பாத்துல அப்படி என்ன இருக்கு)

புத்தாண்டில் பதவியேற்கும் ஒபாமாவுக்கு இதை விட மகத்தான ஒரு வரவேற்பை யாரால் கொடுக்க முடியும்?
(பாவம் இப்பதான் புள்ள குட்டிகளோட வெள்ளை மாளிகைக்கு சுன்னாம்பு அடிக்க கிளம்பியிருக்காரு அவர எதுக்கு வம்புக்கு இழுக்கிறீங்க.)

முறைதவறி பிறந்த குழந்தை

AM 12:21 Hisham Mohamed - هشام 4 Comments

சனிக்கிழமை அரச தொலைக்காட்சியில் மாலை செய்தி அறிக்கையை வாசிச்சிட்டு நொறுக்குத்தீணியோட சந்தோசமா வீடு திரும்பினேன். Body wash பன்னிட்டு சூடா ஒரு காப்பி குடிக்கலாம்னு குளிக்கபோன தண்ணீ கட். சடார்னு என்னுடைய ஞாபகத்துக்கு வந்தது கொஞ்ச காலத்துக்கு முதல்ல நான் தகவல் பரிமாற்று தொலைக்காட்சியொன்றில் பார்த்த தண்ணீர் இல்லாம போனால் புத்தீஜீவிகள் என்ன செய்வார்கள் என்ற விவரணத்திரைப்படம்தான். அப்படி ஒரு நிலை வந்தா தண்ணீரைப்பொன்ற ஒரு திரவப்பதார்த்தத்தின் தேவை அதிகரிக்கும் அதை எங்கிருந்து பெறுவது. இருக்கவே இருக்கு ஒரேஞ்ச் பழச்சாறு மற்றும் பால். இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தா சூப்பர் ஸ்டாரின் கட்அவுட் இற்கு பாலாபிNஷகம் செஞ்ச மாங்கா பசங்களுக்கு கல்லடிக்க நினைக்காதா? சவரம் செய்வதற்கு ஒரேஞ்ச் பழச்சாறு ஆனால் சவரம் செய்த பழச்சாறு இன்னும் பல தேவைகளுக்கும் பயன்படும். இப்படி நினைச்சு பார்க்க முடியாத பல விடயங்கள்.

இருக்கும் போது அருமை தெரியாதுன்னு சொல்லுவாங்க இது தண்ணீருக்கு மட்டுமில்ல லியனாடோ டாவின்சி என்கிற அறிஞன் வாழ்ந்த காலத்தில் கூட அவர் சொன்ன பல கண்டுபிடிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை இப்பொழுது ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது டாவின்சி வாழ்ந்திருக்க வேண்டிய யுகம் மாறிப்போனதாக நான் உணர்கிறேன். டாவின்சியைப்பற்றி பதிவெழுத ரொம்ப நாளாக காத்திருந்தேன். சந்தர்ப்பம் அமைந்துவிட்டது.



இத்தாலியில் ஒரு வழக்கம் பெயரோடு பிறந்த இடைத்தையும் சேர்த்தே அழைப்பார்கள். லியனாடோ இவர் வின்சி என்ற இடத்தில் பிறந்தார். வின்சியில் பிறந்ததால் டா வின்சி என்று அழைத்தார்கள். பொதுவாக லியனாடோ என்றே தன்னுடைய படைப்புகளில் பெயர் இடுவது இவரது வழக்கம். இவர் தன்னுடைய தந்தை பெயரை அதிகம் பயன்படுத்துவதில்லை அதற்கு போதிய சான்றுகள் இல்லாத வரலாறு சொல்லும் கதை லியனாடோ முறைதவறி பிறந்த குழந்தை என்பதாகும்.

மோனாலிசா ஓவியம் மூலமாக உலகப்புகழ் பெற்ற லியனாடோவை கட்டிடக்கலைஞராகவும் ஓவியராகவும் சிற்பியாகவும் பொறியியலாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் அறிந்திருக்கிறோம். லியானாடோவின் பல ஓவியங்கள் இன்றும் பல மில்லியன் டொலர்களுக்கு விற்பனைக்கு விடப்பட்டாலும் அவருக்குள் இருந்த ஓவீயங்களின் மவுசு காரணமாக நாம் அறியாத இன்னுமொரு பக்கம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இவர் ஒரு சிறந்த சிந்திக்கக்கூடிய கற்பனை கதைகளை எழுதும் திறமைப்படைத்தவர்.

வலைப்பூ யுகம் லியனாடோவின் காலத்தில் இருந்திருந்தால்?? இருப்பினும் அவருடைய படைப்புக்கள் பலவற்றை இணையதளங்களில் படிக்க கிடைப்பது சந்தோசத்தை தருகிறது.

இவருடைய சிந்தனைக்கதைகள் சிறுபிள்ளைகளுக்கான பொழுதுபோக்கு கதைகள் இல்லை. பல உள் அர்த்தங்களை கொண்ட வயது வந்தவர்களுக்கான அர்த்தமுள்ள கதைகள். நான் படித்த ஒரு கதை கொடி மரமும் பழைய கம்பும்.

சுவர்க்கத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் பசுமையான இலைகளை கொண்ட ஒரு கொடி தன்னுடன் நெருங்கி இருக்கும் ஒரு பழைய கம்பை கேவலமாக பார்த்து வருத்தப்பட்டுக்கொண்டது.

ஏய் பழைய கம்பே நீ என்னை விட்டு சற்று விலகி செல்லக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியது அந்த கொடி..

எந்த பதிலும் சொல்லக்கூடாது என்ற திடமான கொள்ளையோடு இருந்த கம்பு எதுவும் பேசவில்லை.

அடுத்ததாக அந்த கொடி தன்னை சுற்றி இருந்த முள் வேலி ஒன்றை பார்த்து நீ என்னுடைய அழகைக் கெடுக்கிறாய் உன்னால் ஒதுங்கிப்போக முடியாதான்னு கேட்டதாம்.

காதில் விழாதது போல வேலியும் தன்பாட்டில் இருந்தது.

கொடி உச்சியில் இருந்து இதை கவனித்துக்கொண்டிருந்த பல்லி கதைக்க ஆரம்பித்தது.

ஏய் அழகான கொடியே........
நீ பார்க்கலயா?
இந்த பழைய கம்பு உன்னை தாங்கிக்கொண்டிருக்கு.
இந்த முள் வேலி தீய சக்திகளிடமிருந்து சதா உனக்கு பாதுகாப்பு தருது..

இது போல ஏராளமான சிந்தனை கதைகளை லியனாடோ எழுதியிருக்கிறார். இதில் பல கதைகள் உண்மை வடிவில் இருந்து வாய்க்கு வாய் பரவி மாற்றம் பெற்று விட்டன.
(உங்க கிட்னியை தட்டி ஒரு சிந்தனையை பின்னூட்டமா போடுங்க.....)

இவருடைய சிந்தனை கதைகளை படிக்க ஆசைப்படுபவர்களுக்காக... லியனாடோவின் கற்பனை கதைகள்.

தண்ணீ வருது குளிச்சிட்டு வாரேன். அடுத்த பதிவில் சந்திப்போம்.