இருளில் ஓர் இரவு

22:35 Hisham Mohamed - هشام 5 Comments

இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதில் ஆயிரம் கேள்விகள் எனக்குள்.மின்சாரம் துண்டிக்கப்ட்டால் கொழும்பு வாழ்க்கை பரபரப்பாவது பழக்கப்பட்டுவிட்டது.

அந்த தாயும் தந்தையும் என் வீட்டு முற்றத்தில் இருந்த மரத்தின் அடியில் பாசத்திற்காய் தவித்ததை அந்த மரம் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. (மனிதர்களே உணராத போது மரங்கள் என்ன விதிவிலக்கா)

மறக்க முடியாத அந்த இரவு

இறுதியாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது என் வீட்டு முற்றத்தில் நடந்த சோகமான சம்பவத்தால் இன்னுமொரு மின்சார தடையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. (இன்னும் பல பகுதிகள் மின்சாரம் இருந்தும் இருளில்)

அன்றிரவு வீட்டின் மொட்டை மாடியில் தொலைபேசியில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்த போது திடீரென நகரெங்கும் இருள் வானெங்கும் பெரும் இரைச்சலுடன் சிவப்பொளிகள்.

கொழும்புக்கு இது புதியது என்பதால் வேடிக்கை பார்த்தவர்கள் பலர். அதில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நானும் அம்மாவும் வீட்டு வாசலில், முற்றத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் என ஏராளம் பேர்.

பேரீரைச்சலுக்கு மத்தியில் வானத்தை அண்ணாந்து பார்த்தவள் இரத்தம் சிந்தி நிலத்தில் விழ மரத்தடியெங்கும் மனிதம் சிந்திக்கிடந்தது.

ஜயோ என்ற ஓலத்துடன் கத்திய சகோதரியின் குரல் அடங்கு முன் அந்த 14 வயது சிறுமி விடைபெற்றுக்கொண்டதை பெற்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவள் ஒரு நாள் கழித்து பிணமாக வீடு வந்தாள்.

அன்றிரவு பல மணி நேரத்திற்கு பின் ஒரு குடும்ப விளக்கை அணைத்து மின்சாரம் தந்தது இருள்.

விடை தெரியாதா கேள்விக்கு இன்னும் எத்தனை பேர் பலியாகப்போகிறார்கள்.

இது எந்த மொழிக்கும் இனத்துக்கும் சார்பான பதிவல்ல. நான் கண்டதை பதிகிறேன்.(காணாதது எத்தனையோ)

மனிதர்கள் கவசங்களல்ல, பலிகடாக்களல்ல.
என் தேசம் யாருக்கும் சாபமுமல்ல.......

5 COMMENTS:

//இது எந்த மொழிக்கும் இனத்துக்கும் சார்பான பதிவல்ல. நான் கண்டதை பதிகிறேன்//

உயிர் வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்பதை ஏன் எவரும் உணரவில்லை இன்னும்??

Sinthu said...

"இது எந்த மொழிக்கும் இனத்துக்கும் சார்பான பதிவல்ல. நான் கண்டதை பதிகிறேன்"
சில சமயங்களில் கண்டதையும் சொல்லக் கூடாதவர்களாக, சொல்ல முடியாதவர்களாக இருக்கிறோமே. அதை என்ன சொல்ல ஹிஷாம் அண்ணா.


"மனிதர்கள் கவசங்களல்ல, பலிகடாக்களல்ல.
என் தேசம் யாருக்கும் சாபமுமல்ல....... "
எல்லோரும் இதைப் புரிந்துகொண்டால் சரி தான்...

shanthru said...

இனறு மனித நேயம் எங்கோ போனது, கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டது, இதுதான் மனிதனின் தலை விதி....

//மனிதர்கள் கவசங்களல்ல, பலிகடாக்களல்ல.
என் தேசம் யாருக்கும் சாபமுமல்ல.......//

பதிவெழுதுகிற உங்களுக்கும் படிக்கிற எனக்கும் தெரிகிறது. போரைப்பற்றியே சதா சிந்திக்க.. தாம் தோற்கிறபோது போரை வெறுத்தும் வெல்கிற போது போரைக்கொண்டாடியும்.. மக்கைளைக் கொன்று குவிக்கும்.. இரண்டு தரப்புக்கும் தெரியப்போவதேயில்லை எப்போதும்...

Joe said...

என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.
நெஞ்சைக் கனக்க செய்த ஒரு பதிவு.