வெற்றிப்பயணத்தில் ஒரு வருடம் எப்படி போச்சுன்னு தெரியல ஜனவரி 27ம் திகதி...

12:25 Hisham Mohamed - هشام 2 Comments

இதே போல ஒரு ஜனவரி 27ம் திகதி ஆனால் 2008ம் ஆண்டு.பொதுவாக வாரஇறுதி நாட்களிலும் போயா விடுமுறை தினங்களிலும் இலங்கையின் தலைநகரமும் பிரதான வீதிகளும் பாழடைந்து போயிருக்கும். அந்த ஞாயிற்றுக்கிழமை என் நினைவுகளில் இருந்து நீங்காத இடம்பிடித்து விட்டது. நல்ல நண்பர்களோடு உருவான நட்புக்கு விடை சொல்வதென்பது அவ்வளவு இலகுவான விடயமில்லை. கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு உருவான 4 வருட நட்புக்கு பிரியாவிடை கொடுக்கப்போகிற நாள்.

புதிய வானொலியில் என் வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ சந்திப்பிற்கு புறப்பட்ட எனக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்ததை நான் அறிந்திருக்கவில்லை. என்னதான் உறுதியோடு நான் முடிவெடுத்திருந்தாலும் என் உள் மனதில் போவதா இல்லையா என்ற பெரும் போராட்டம். 99.6 FM இன் பரீட்சார்த்த ஒலிபரப்பில் இளையராஜாவின் அஜந்தா படப்பாடல்களை ரசித்தவண்ணம் வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தை வந்தடைந்தேன்.

வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடனான இரண்டு மணிநேர சந்திப்பின் நிறைவில் 99.6 FM பண்பலை என் வாழ்க்கையின் இலட்சியப் பயணத்தின் ஓர் இலக்கை அடைய உதவியது.. 'நாளை 28ம் திகதி உத்தியோகபூர்வமாக கடிதம் கிடைக்கும் வரை யாரிடமும் என் சந்தோசத்தை நான் பகிர்ந்து கொள்ள முடியாது ' இது நண்பர்களுக்கு 27ம் திகதி நான் சொன்ன பதில். அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் இலங்கை வானொலியில் கடமை அறிவிப்பாளர்களை தவிர வேறு யாரும் வந்திருக்கவில்லை.

அன்று மதியம் 1 மணிக்கு இலங்கை வானொலியின் சன்டே சூப்பர் ஹிட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாரானபோது இருந்த சந்தோசம் விடைபெறும்போது இருக்கவில்லை. 3 மணிக்கு நான் உணர்ந்து கொண்ட பிரிவின் வலியை சொல்ல யாரும் இருக்கவில்லை. பல சிகரங்களை உருவாக்கிய தமிழ் ஒலிபரப்பின் முன்னோடியை விட்டுப்பிரிய என் மனம் பெரும் பாடுபட்டது. ஒலிபரப்பின் படிநிலைகளை நான் கற்றுக்கொண்ட அந்த கலையகம், 4 வருடங்களுக்கு மேலாக பழகிய நண்பர்கள், அவர்களுடன் அரட்டை அடித்த சிற்றுண்டிச்சாலை, அறிவிப்புச் செய்ய ஆரம்பித்த அந்த ஒலிவாங்கி, பாடல்களையும் இசையையும் படித்த தெற்காசியாவின் முதற்தர இசைக்களஞ்சியம், வேதனைகளை சொல்லி அழும் மாமரம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்ப துன்பம் இரண்டும் கொண்ட வாழக்கைப்பயணத்தில் நான் கடந்து வந்த பாதை ரொம்பவும் குறுகியது. இன்னும் பல மைல் தூரம் நான் பயணிக்க வேண்டியுள்ளது. அதற்கு இறைவனின் ஆசியும் உங்கள் பங்களிப்பும் எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

புதிய பயணத்திற்காக ஒரு வெள்ளை நிற சேட் ஒன்றை மாலை வேளையில் வாங்கிக்கொண்டேன். நல்ல முயற்சிகள் சந்தோசமான பொழுதுகள் என்றால் வெள்ளை நிற சேட் அணிவது எனக்கு சென்டிமன்ட்.

28ம் திகதி ஜனவரி 2008ம் ஆண்டு நான் கடமையில் இணையப்போகிறேன்.
(தொடாரும்.)
பி.கு - கடவுளுக்கு பிறகு நான் நன்றி சொல்லவேண்டியவரை பெயரளவிலும் குறிப்பிட முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

2 COMMENTS:

Sinthu said...

எப்ப முடியும்...................
"வேதனைகளை சொல்லி அழும் மாமரம் என அடுக்கிக்கொண்டே போகலாம்."
அண்ணா நீங்களும் அழுவீங்களா?
ஒருக்கா அழுது காட்டுங்களேன்................. plzzzzzzzzzzzz

ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல பதிவு