நமது கடல்... ஒரு மாயையும், நங்கூரமிட்ட உண்மையும்! 🚢🌊

5:15 PM Hisham 0 Comments

 "நம்ம நாட்டைச் சுத்தி கடல் இருக்கு, அதனால மீன்களுக்குப் பஞ்சமே இல்லை... நினைச்ச நேரமெல்லாம் வலை விரிச்சு மீன்களை அள்ளிக்கிட்டே இருக்கலாம்" - இப்படித்தான் நம்மில் பலரும் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நிதர்சனம் நாம் நினைப்பது போல அத்தனை அழகானதல்ல.

சமீபத்தில் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றிருந்தபோது, 32 நாட்கள் நீடித்த ஒரு நீண்ட ஆய்வை முடித்துவிட்டு நங்கூரமிட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான கப்பலைப் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அதன் பெயர் R/V Dr. Fridtjof Nansen. ஐக்கிய நாடுகளின் கொடி பறக்க, கம்பீரமாக நின்றிருந்த அந்த இராட்சத கப்பல் சொன்ன கதைகள் பல.


விந்தையான விஷயம் என்னவென்றால், அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையிலான அந்தப் போர் பதற்றம் மட்டும் இல்லாதிருந்தால், இந்தக் கப்பல் இலங்கை மண்ணிற்கு வந்திருக்கவே வாய்ப்பில்லை. உண்மையில் இது ஓமன் கடலுக்குச் செல்ல வேண்டியது. அங்கே நிலவிய பாதுகாப்பற்ற சூழலால், அதன் திசை மாறி நம் நாட்டிற்கு ஒரு வரப்பிரசாதமாக வந்து சேர்ந்தது.
உலகளவில் சுமார் 90 சதவீத கடல் மீன் வளங்கள் இப்போது 'அளவுக்கு அதிகமாகப் பிடிக்கப்பட்டு' (Over-fished) அல்லது முற்றாக அழிந்து (Depleted) போய்க்கொண்டிருக்கின்றன. நம் கடலடியில் என்ன நடக்கிறது, இன்னும் எவ்வளவு மீன்கள் மிச்சமிருக்கின்றன என்ற எந்தத் தரவுகளும் (Data) நம் அரசாங்கத்திடமும் இல்லை, மக்களாகிய நமக்கும் தெரியாது.
இந்தக் கப்பல் கடந்த 32 நாட்களாக எமது நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) சுற்றித் திரிந்து, மீன் வளம் எங்கே செறிவாக இருக்கிறது, கடல் நீர் எவ்வளவு சூடாகியிருக்கிறது, நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) கடலை எந்தளவுக்குக் பாதித்திருக்கிறது என அத்தனையையும் நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறது Dr. Fridtjof Nansen கப்பல்.
நோர்வே நாடும், FAO அமைப்பும் இணைந்து சுமார் 1 மில்லியன் டொலர்களை இதற்காகச் செலவிட்டிருக்கிறார்கள். இந்த ஆய்வில் இலங்கை விஞ்ஞானிகளும் பங்கேற்றனர், அதிலும் குறிப்பாகப் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு மிக அதிகம் என்பது நமக்கெல்லாம் பெருமை.
துறைமுகத்தில் நின்று அந்தப் பிரம்மாண்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்றுதான் தோன்றியது... இன்று நம் கண்ணுக்குப் புலப்படாத இந்தத் தரவுகள்தான், நாளை நம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், எமது எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றன.

ஏற்றமிகு இளைஞர் விருதைக் கரங்களில் ஏந்திய தருணம்

4:12 PM Hisham 0 Comments

 சில தருணங்கள் காலத்தின் பக்கங்களில் என்றென்றும் உறைந்துவிடுகின்றன; அந்தப் பிரமாண்டமான மேடையும், பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நிறுவிய "


ஏற்றமிகு இளைஞர் விருதைக் கரங்களில் ஏந்திய கடந்த ஏப்ரல் 30-ஆம் திகதி வியாழன் மாலையும் அப்படியானதொரு பொக்கிஷமே.

நேர முகாமைத்துவமும், கலையழகும், கட்டுக்கோப்பும் ஒருங்கே கைகோர்க்க, குறித்த நேரத்தில் அவ்வளவு நேர்த்தியாக அரங்கேறியது அகில இலங்கை கம்பன் கழகத்தின் விழா 2026. அங்கே கழகத்து உறுப்பினர்கள் மட்டுமன்றி, கடல்கடந்து அவுஸ்திரேலியா, இலண்டன் எனப் பல தேசங்களிலிருந்தும் வருகை தந்து, என்னை அன்பால் அரவணைத்த உள்ளங்கள் தந்த ஊக்கம் என்னை நிஜமாகவே மெய்சிலிர்க்க வைத்தது.
தமிழ் இலக்கியத்தின் பெருங்கடல், மதிப்பிற்குரிய கம்பவாரிதி ஜெயராஜ் ஐயா அவர்கள் திருவாயிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு சொல்லும் ஆசீர்வாதங்களாய் அமைய, அந்த வாழ்த்து மழையில் திளைத்து நின்றேன். என் குடும்பத்தினரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்து, அவரின் ஆசிகளைப் பெற்றுக் கொண்ட அந்த நொடிகள், என் வாழ்வில் நான் ஈட்டிய அரும்பெரும் பேறு.
தங்களின் அன்றாடப் பணிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, நான் விருதுபெறும் தருணத்தைக் காண ஓடோடி வந்து வாழ்த்திய அந்தப் பேருள்ளங்களுக்கு என் வார்த்தைகளால் எங்ஙனம் நன்றி நவில்வேன்? இத்தனை பெரியதொரு சபையில், திசையெங்கும் வீற்றிருந்த மாபெரும் சான்றோர்களின், ஆளுமைகளின் அன்பை வென்றெடுத்தமை நான் செய்த பெரும் பாக்கியமே அன்றி வேறில்லை.
இந்தக் காணொளியினூடாக அந்த உன்னதத் தருணத்தை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவரின் வாழ்விலும் சகல நலன்களையும் வழங்கி அருள்புரிவானாக!
நன்றி!