மார்கழி மாதமும் பள்ளிக்கால ஞாபகங்களும்..

AM 12:25 Hisham 2 Comments


நத்தார் மாத குளிர் வேளையில் என் இராக்கால பதிவொன்றிற்காய் தட்டியது என் சிந்தனைக்கதவு விட்டு விட்டு கூரையில் விழும் பனித்துளிகளின் சத்தமும் சில்லென வீசும் மார்கழிக்காற்றும் தெளிந்த வானமும் அடிக்கடி எனக்கு பள்ளிக்கால விடுமுறையைத்தான் இன்றும் ஞாபகப்படுத்துகிறது.

பள்ளிக்கால அதிகாலைப்பொழுதும், ஆரம்பிக்கும் போதே என் காதில் விழும் சிந்தனைகளும் இப்போதைய என் வாழ்க்கை மாற்றத்தில் என்னை மூழ்கி சிந்திக்க வைக்க காரணமாக இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்கிறேன்.


அம்மா எழும்பும்போதே இலங்கை வானொலியை காலை நேர செய்திக்காக இயக்கி விடுவார்.

எழும்போதே சமயச் சிந்தனைகள் தான் காது நிறைக்கும். அதில் தமிழ் தெரிந்த பிக்கு ஒருவரின் சிந்தனையும் வரும் என் ஞாபகம் சரியாக இருந்தால் அது 'போதி மாதவனின் நற்சிந்தனைகள்'.

எழுந்தும் எழாமலும் பனி படர்ந்த என் கிராமத்து வீட்டில் தேநீர் கோப்பையுடன் மீண்டும் ஒளிந்து கொள்வேன் போர்வைக்குள்ளே.

பொங்கும் பூம்புனலின் மந்திரக்குழலிசையுடன் பரபரப்பாக தயாராகி பள்ளி செல்லும் வழியில் ஒரு நாள் கேட்ட மார்கழிப் பூவே பாட்டு சத்தியமா இன்னும் என் ஞாபகத்தவிட்டு போகல.


வீட்ல இருந்து கொஞ்சம் தூரம் நடந்து போனா அந்தோனியார் பள்ளிக்கூடம் வரும். பள்ளி மணி அடிக்கும் வரை தேவாலயத்தின் வாசலில் நண்பர்கள் கடந்த நாளின் சாகசங்களை பகிர்ந்து கொள்வார்கள். பல நாட்கள் பள்ளி மணி அடித்த பிறகுதான் வந்தேன் என்று எல்லைச்சுவர்கள் உண்மை சொல்லும்.


வாழ் நாளின் அதிக நாட்கள் சிந்தனைகளோடுதான் தொடங்கியது.
அம்மா எழுப்பும்போதே வானொலி, பள்ளியில் பிதா ஹிலேரியன் பர்னான்டோ நாளும் சொல்வார் ஒரு நற்சிந்தனை.


அந்த அழகிய நாட்களின் பசுமையான நினைவுகளுடன் என் எண்ணம் சிறகடித்து பறக்கிறது.

2 COMMENTS:

ஆத்மா சொன்னது…

என்றும் நினைவில் நிற்பவைதான் பள்ளிக்கால நினைவுகள்...
பொங்கும் பூம்புனல் பள்ளிக்குப் போகும் போதே தெருவோர வீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் ரசித்துக் கொண்டே செல்வேன் நல்ல பகிர்வு...

சிகரம் பாரதி சொன்னது…

Gnaabagangalai meettich chendra padhivu arumai. Ennaiyum kadandha kaalaththai nokki azhaiththuch chendradhu. Thodarndhu padhivu ezhudhungal.

My site: http://newsigaram.blogspot.com