பவித்ரன் அண்ணாவுக்கு அஞ்சலி!

3:05 PM Hisham 0 Comments

உயர்தரம் முடித்து பெறுபேற்றுக்காக காத்திருந்த நேரம் ஒரு நாள் அவரை நான் முதன் முதலில் எனது பாடசாலையில் இரண்டு நாள் FM வானொலி நிகழ்வொன்றின் போது சந்தித்தேன். தொப்பி அணிந்து துடிதுடிப்பாக ஒருவர் என்டனா திசையை சரி செய்வதில் மும்முரமாக இருந்தார். அவர்தான் ஒலிபரப்பு நுட்பங்களை சொல்லித்தர வந்தவர் என்று பிறகுதான் அறிந்து கொண்டேன். அன்று தொடங்கியது அவருடனான அறிமுகம்.



கண்டியிலிருந்து பண்டாரவளைக்கு இரவு ரயிலில் பவித்ரன் அண்ணாவுடன் பயணமாகிறேன். பவித்ரன் அண்ணா கொத்மலை பிராந்திய வானொலி மூலமாக பரீட்சயமான அறிவிப்பாளராக இருந்தார். நீண்ட நாள் தொந்தரவுக்கு பிறகு என்னை அவா் ஊவா சமூக வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளர்களை இணைத்து கொள்கிறார்கள் என்று அழைத்துச்சென்றார்.


 

நீண்ட தூர ரயில் பயணத்திற்கு பிறகு அதிகாலை 5 மணியளவில் கடும் பனியால் மூடிய பண்டாரவளையை அடைந்தோம். பயணம் நெடுகிலும் அந்த வானொலி நிலையம் எப்படி இருக்கும் என்று பலவாறு கற்பனை செய்து வைத்திருந்தேன். என் கற்பனைகளுக்கெல்லாம் இன்னும் தீனி போட்டாற் போல் ஊவா வானொலி ஒரு மலை உச்சியில் இருக்கிறது கொஞ்சம் தூரம் பயணிக்க வேண்டும் என்றார். பண்டாரவளை நகரில் இருந்து சிறு தொலைவில் இயற்கை அழகு சுழ உயரத்தில் கம்பீரமாய் நின்றது ஊவா சமூக வானொலி. எத்தனையொ எதிர்பார்ப்புகளுடன் முதன் முதலில் ஒரு வானொலி நிலையத்தை பார்க்கிறேன். 9 மணியளவில் மேலதிகாரியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். துரதிஷ்டவசமாக நகரை அண்மித்தவர்களுக்கு மாத்திரம்தான் வாய்ப்பு தரலாம் என்று மறுத்துவிட்டார்கள். ஒரு வானொலி நிலையத்தை பார்த்த சந்தோசமும் முயற்சி செய்த திருப்தியும் எனக்கு பொிதாக எமாற்றத்தை தரவில்லை. இதுபோல இன்னுமொரு மலையேறவேண்டும் தயராக இருங்கள் என்று நம்பிக்கை தந்தார்.


ஒரு சில வாரங்கள் கழித்து பவித்ரன் அண்ணாவிடம் இருந்து அழைப்பு வந்தது. கொத்மலை சமூக வானொலி கட்டுப்பாட்டாளாிடம் கதைத்துவிட்டேன் நோ்முகப்பரீட்சைக்கு வாருங்கள் என்று. நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் இறங்கி இருவரும் கொத்மலை வானொலி நிலையம் செல்லும் பஸ்ஸில் புறப்பட்டோம். ஒரு முக்கால் மணி நேர பயணத்தின்போது கொத்மலை FMஇல் தமிழுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பற்றியும் ரசிகா்களை பற்றியேல்லாம் சொல்லிக்கொண்டே வந்தாா். நிலையத்தை வந்தடைந்தோம் இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த ஒரு இடம். பவித்ரன் அண்ணா சுறுசுறுப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா் அரை மணி நேரத்தில் பல அழைப்புகளும் வந்தன. பின்னா் கட்டுப்பாட்டாளருடன் நோ்முகப்பரீட்சையும் நடந்தது. நிகழ்ச்சிகளில் குரல் கொடுப்பதற்கான வாய்ப்பும் கிடைத்து ஆனால் கொத்மலை வானொலி தொலைவில் இருந்ததால் ஒரு சில நாட்கள் கழித்து மலையக பிராந்திய வானொலியில் முஸ்லிம் சேவையில்  கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்.

ஒரு பிராந்திய வானொலி சேவையில் பணியாற்றினாலும் எத்தனையோ இளம் ஒலிபரப்பாளா்களுக்கு அவா் களம் அமைத்து கொடுத்திருந்தாா்.


இளைஞர்களை கைப்பிடித்து களம் காணச்செய்தவரை காலம் விரைவாக அழைத்துக்கொண்டது. அவர் மறைந்து 1 வருடம் பூர்த்தியாகிறது (December 29, 2015 )  . எல்லாம் வல்ல இறைவன் உங்களை பொருந்திக்கொள்ளட்டும்.

என்றும் நன்றியுடன் உங்களை நினைவு கூர்கிறேன். 

அன்புடன் ஹிஷாம்.