சோர்வான மனநிலையில் இருந்து மீண்டு இழந்த சக்தியை பெறுவது எப்படி?
அதீதமான களைப்போடு இருக்கக்கூடிய ஒரு நாளில் நாம் நமது சக்தியை முழுமையாக இழந்திருப்போம். ஒரு காரியம் செய்வதற்கும் நமக்கு மனது வராது. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் கொஞ்சம் உறங்கினால் மீண்டும் எழும்போது புத்துணர்வு கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு உறங்குவோம் ஆனால் அந்த உறக்கத்துக்கு பிறகும் கூட அதே சோர்வு நமக்குள்ளே அப்படியே இருக்கக்கூடும்
உறக்கமும் ஓய்வும் இரண்டு வித்தியாசமான விஷயங்கள் இரண்டும் ஒன்று அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் நன்றாக உறங்கி இருக்கிறோம் அதனால் நல்ல ஒரு ஓய்வு கிடைத்துவிட்டது என்று நினைக்கிறோம் ஆனால் யதார்த்தத்தில் அந்த ஓய்வு உண்மையான நிறைவான ஒரு ஓய்வு தரக்கூடிய பலனை தந்திருக்காது.
நிறைவான ஒரு ஓய்வு நமது ஆற்றலை அதிகப்படுத்துவது மாத்திரமல்ல புதிய கற்பனைத் திறனையும் நமக்குள்ளேயே அதிகப்படுத்தி நமது தொழில் ரீதியான வாழ்க்கையிலும் கல்வி சார்ந்த வாழ்க்கையிலும் கூட பல முன்னேற்றங்களை அடைய செய்யும். இந்த பதிவில் உண்மையான ஓய்வுக்கு வழிகாட்டக்கூடிய நான்கு விஷயங்களை பார்ப்போம்.

முதலாவது விஷயம் உடல்ரீதியாக நமக்கு கிடைக்கக்கூடிய ஓய்வு இதை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று நாம் ஒரு செயலில் ஈடுபடும்போது செயல் ரீதியாக நமக்கு கிடைக்கக் கூடியது இன்னுமொன்று நாம் எந்த செயலும் செய்யாமல் செயலற்று இருக்கும் போது கிடைக்கக்கூடிய ஓய்வு. முதலில் நாம் ஒரு செயலில் ஈடுபடுவது என்பது உதாரணமாக தியானம் செய்வது அல்லது உடற் பயிற்சிகளை செய்யவது இதனூடாக உடல் ரீதியாக நமக்கு கிடைக்கக்கூடிய ஒருவிதமான ஓய்வு இது மனதளவில் நமக்கு அமைதியை தரும். அடுத்து இரண்டாவது விஷயம் செயலற்று இருக்கிற போது நமக்கு கிடைப்பது அதுதான் நிறைவான ஒரு உறக்கம் தரக்கூடிய ஒரு நல்ல ஓய்வு.

இரண்டாவது விஷயம் உளரீதியாக கிடைக்கக்கூடிய ஓய்வு அல்லது மனதளவில் கிடைக்கக்கூடிய ஓய்வு. ஒருநாள் இரவு பொழுது ஒரு ஏழு அல்லது எட்டு மணி நேரம் உறங்கி இருப்போம் அடுத்த நாள் காலையில் எழும்போது உடல் சோர்வாகவே இருக்கும் நல்லதொரு உறக்கம் தந்த நிறைவான ஒரு ஓய்வு கிடைக்காமல் போய் இருக்கும். அதற்கு என்ன காரணம்? இது போல எப்போதாவது நீங்களும் உணர்ந்திருக்கிறீர்களா? நண்பர்களே நாம் உறங்கினாலும் நமது உணர்வுகள் செயற்பட்டுக் கொண்டே இருக்கும். அன்றைய நாளில் நமது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் சிக்கல்கள் அதுபோல அழுத்தங்கள் என்று பல்வேறுபட்ட விஷயங்கள் நமது சிந்தனையில் ஓடிக்கொண்டே இருந்திருக்கக்கூடும் ஆனால் நாம் உறங்கி இருப்போம் நிறைய கனவுகள் கூட அந்த இரவுப் பொழுதில் நீங்கள் கண்டு இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு நீண்ட நேர உறக்கமும் நல்லதொரு நிறைவான ஓய்வின் ஆற்றலை நமக்கு தருவதில்லை.
இந்த சவாலை எதிர்கொள்வதற்கு நாம் என்ன செய்யலாம்?
பரபரப்பான நமது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவை ஒரு இடைவெளி எடுத்துக் கொள்வது நல்லது உதாரணத்துக்கு ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு தடவை 10 அல்லது 15 நிமிடங்கள் நமது பரபரப்பான வாழ்க்கையை கொஞ்சம் நிதானமாக மாற்றிக்கொள்ளலாம்(Slow-Down). அதில் நமக்கு அமைதியை ஏற்படுத்துகிற ஒரு காரியத்தை செய்யலாம். உங்களுடைய ஆன்மீக ரீதியான ஒரு விஷயமாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் உங்களை அமைதிப் படுத்திக் கொள்கிற, ஒரு புத்துணர்வைத் தரக் கூடிய விஷயத்தை நீங்கள் செய்யலாம்.

மூன்றாவது விஷயம் உணர்வுரீதியான ஓய்வு நமது வாழ்க்கையில் எப்போதும் ஒரு வெளிச்சமான திரைக்கு முன்னால் அல்லது கணினி திரைக்கு முன்னால் அல்லது ஒரு conference callஇல் பலருடன் ஒரே சந்தர்ப்பத்தில் இணைந்த ஒரு உரையாடல். அது நீங்கள் காரியாலயத்தில் பணிபுரியும் போது அல்லது ஒரு message app வழியாக கூட இருக்கலாம். எப்போதும் பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்கும் கூடிய ஓர் இரைச்சல் சத்தம். இப்படி பல விஷயங்கள் உணர்வு ரீதியாக உங்களை சோர்வடையச் செய்யும். நாம் எப்போதும் ஒரு கடினமான காரியத்தை செய்தால் தான் அல்லது உடலளவில் இயங்கினால்தான் சோர்வடைகிறோம் என்று நினைக்கிறோம் ஆனால் அப்படியல்ல நண்பர்களே உணர்வு ரீதியாகவும் ஒரு மனிதன் வாழ்க்கையில் சோர்வடைய கூடும்.
இப்படி உணர்வு ரீதியாக நம்மை சோர்வடையச் செய்யக் கூடிய விடயங்களிலிருந்து நாம் நம்மை கவனித்துக் கொள்வது மிக அவசியம். குறிப்பாக இலத்திரணியல் சாதனங்களுக்கும் வாழ்க்கையில் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட வேண்டும். குறிப்பாக உறக்கத்துக்கு முன்பு ஸ்மார்ட்போனை நிறுத்தி வைத்து விடலாம். உறக்கத்துக்கு செல்வதற்கு முதல் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவு செய்தால் அது உணர்வு ரீதியாக நம்மை ஒரு விதத்தில் கஷ்டப்படுத்தலாம். சில நேரங்களில் தேவையற்ற சிந்தனைகளை கூட தரக்கூடும் இலத்திரனியல் சாதனங்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுத்தால் உணர்வு ரீதியான ஒரு ஓய்வு நமக்கும் கிடைக்கும்.

நான்காவது, படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கான ஓய்வு
நீங்கள் தொழில் ரீதியாகவோ அல்லது கல்வி கற்கக்கூடிய விடயங்களிலோ அதிகமாக பிரச்சினைகள் சிக்கல்களுக்குத் தீர்வு காண கூடிய ஒருவராக இருக்கலாம் அல்லது அதிகம் படைப்பாற்றலை பயன்படுத்தக் கூடிய ஒருவராக இருக்கலாம். அப்படியென்றால் இந்த வகையான ஓய்வு நிச்சயம் உங்களுக்கு உதவும் creative rest என்று ஆங்கிலத்தில் இதை சொல்வார்கள். நமக்குள்ளே பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் இந்த ஓய்வு தான் நமது வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் முதன் முதலாக பார்த்த நீர்வீழ்ச்சி அல்லது கடற்கரை அல்லது ஏதேனும் ஒரு இயற்கை காட்சி இன்றும் உங்களுடைய ஞாபகத்தில் நிற்கிறது ஏன் தெரியுமா? அந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்குள்ளே ஒரு பிரமிப்பும் ஆர்வமும் ஏற்பட்டிருக்கும். ஆக இப்போது உங்களுக்கு படைப்பாற்றலை அதிகப்படுத்தக்கூடிய அந்த ஓய்வு எப்படி கிடைக்கப் போகிறது? உள்ளூரில் இருக்கக்கூடிய ஒரு சிறிய பூங்காவுக்கு செல்லுங்கள் அல்லது இயற்கையோடு கொஞ்சம் நேரத்தை செலவு செய்யுங்கள் அப்படியும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் வீட்டின் பின்புறத்தில் அல்லது வீட்டு தோட்டத்தில் இயற்கையோடு கொஞ்சம் நேரத்தை செலவு செய்யுங்கள். ஆனால் இயற்கையின் இந்த ஆசீர்வாதம் மாத்திரம் போதுமானதல்ல உங்கள் படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கு. படைப்பாற்றலை அதிகப்படுத்தும் ஓய்வு இன்னும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால். குறிப்பாக நீங்கள் பணிபுரியக்கூடிய இடம் அல்லது வீட்டில் கல்வி கற்கக்கூடிய இடத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருங்கள். நீங்கள் பல சந்தர்ப்பங்களில் பணிபுரியக்கூடிய, கல்வி கற்கக் கூடிய இடத்தில் அதிகமான குப்பைகள் இருக்கும் அந்த இடமே மிகப்பெரிய ஒரு மன அழுத்தத்தையும் தரக்கூடிய விதமாகத்தான் அமைந்திருக்கும். அந்த இடத்தை அழகுபடுத்திக் கொண்டால் நமக்குள்ளே ஒரு ஆர்வம் பிறக்கும் நாம் செய்யக்கூடிய பணியில் கல்வி கற்கக்கூடிய விஷயத்தில் ஒரு புதிய ஒரு சிந்தனை உதயமாகும்.
எப்போதும் ஞாபகத்தில் கொள்வோம் நீண்டநேர உறக்கம் மாத்திரம் நிறைவான ஓய்வை நமக்கு தந்து விடுவதில்லை.
0 COMMENTS:
கருத்துரையிடுக