விண்ணைத்தாண்டி வருவாயா - என்னை அடிச்சுது இந்த காதல்.
இந்த ஆண்டில்(2010) நான் எழுதும் முதல் பதிவு. திரைப்படத்துக்காக நான் எழுதும் முதல் விமர்சனம். அதை விட பதிவுலகில் காணமல் போய் இரண்டு மாதங்களுக்கு பிறகு என் முகவரி தேடி வருகிறேன்.
சகா லோஷனின் சுகயீனத்திற்கு நன்றி சொல்லி படம் பார்க்க வேண்டி ஆயிட்டு. சாரி பாஸ். ஏன்னா அவர் லீவ் போட்டதால நான் காலையிலயே வரவேண்டி ஆயிட்டு. என்னோட வழக்கமான தூக்கத்துக்கு ஆப்பு வைச்சுட்டு வந்த கவலை வேற. இருந்தாலும் நேரத்தோட வேலையை முடிச்சிட்டு விடிவி பார்க்க போயிட்டன். அதனாலதான் இந்த பதிவு.
கௌதம் மேனன் படம் என்பதால் கொஞ்சம் நம்பிக்கையோடு களம் இறங்கலாம். ஒஸ்கார் நாயகனின் இசை படத்தை பார்க்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை எனக்குள் ஏற்கனவே உருவாக்கி விட்டிருந்தது. மின்னலே படத்துக்கு பிறகு கௌதம் முழுக்க காதலை கருவாக வைத்து எடுக்கும் படம். அடிதடி இல்லாமல் வழக்கமான தமிழ் சினிமா மசாலா கலக்காத படமாகத்தான் இருக்கும்னு என்னை நினைக்க வைத்தது.
படம் வெளிவர முன் வந்த ஸ்டில்ஸ் எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது. மின்சார கனவு படத்தில் வரும் வெண்ணிலவே பாடல் காட்சி போன்ற ஸ்டைலிலும் இன்னும் அலைபாயுதே, உயிரே, காக்க காக்க, கீதாஞ்சலி படத்தை மனத்திரையில் கொண்டுவரும் ஸ்டைலிலும் ஸ்டில்ஸ் வெளியாகியிருந்தது. இதில் ஒரு சிலவற்றை தவிர ஏனையவற்றை படத்தில் காணோம்.
இது தவிர மெக்கிங் ஒப் வி டி வி, அதில் கௌதம் சொன்ன இரண்டு விடயங்களை குறிப்பிட்டு சொல்லலாம். ஒன்று சிம்பவும் த்ரிஷாவும் காதலிப்பதை ரகசியமாக படம் பிடித்திருப்பதாக சொல்லியிருந்தார். இன்னுமொரு விடயம் படம் பாத்துட்டு வெளியில வாரவங்க கொஞ்சம் புன்னகையோடும் கொஞ்சம் கண்ணீரோடும் வந்தால் அதுவே இந்த படத்தோட வெற்றின்னும் சொல்லியிருந்தார். எனக்கு அது நடந்தது.
'விண்ணைத்தாண்டி வருவாயா' டைட்டிலை சுட்டதற்காக ரஜீவ் மேனனுக்கு(மின்சாரக்கனவு படத்தின் இயக்குனர்) நன்றி சொல்லி படம் டைட்டிலோடு தொடங்கியது.
''காதலை தேடிக்கிட்டு போக முடியாது...
அது நிலைக்கணும்...
அதுவா நடக்கணும்...
நம்மள போட்டு தாக்கணும்...
தலைகீழ போட்டு திருப்பணும்...
எப்பவுமே கூடவே இருக்கணும்...
அதான் ட்ரூ லவ்...
அது எனக்கு நடந்தது...
முன்னோட்டத்தில் வருகிற இதே வரிகள் படத்துல தொடக்கத்தில் நெரேஷனா வரும். அப்போதான் ஹீரோவை அடிக்கும் அந்த காதல். புதிதாக வாடகை வீடெடுத்து வருகிறார்கள் கார்த்திக்கும்(சிம்பு) குடும்பத்தினரும். மேல் மாடியில் குடியிருக்கிறார் உரிமையாளர். அவருடைய மகள்தான் ஜெஸி (த்ரிஷா).
சினிமாவில் இயக்குனராகும் கனவுடன் அலையும் கார்த்திக் மலையாளத்து கிறிஸ்தவப்பெண் ஜெஸீயைக் கண்டவுடன் காதல் கொள்கிறார். இங்கே கிறிஸ்தவப்பெண் என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள். கார்த்திக்கை விட ஜெஸி ஒரு வயது கூடியவள் (நிஜத்திலும் சிம்புவைவிட மூத்தவர் த்ரிஷா) இதை ஞாபகப்படுத்தவே 'உனக்கு 81 வயதாகும்போது எனக்கு 80, எனக்கு 49ஆகும் போது உனக்கு 50' என்பதை இருமுறை சொல்லிக்காட்டுவார்.
சிம்பு படம் முழுக்க அழகாகத் தெரிகிறார். ஏன் த்ரிஷாவும் கூட அழகாத்ததான் தெரியிறாங்க. ஒரு சில க்ளோஸ்அப் காட்சிகளில் ஒப்பனையில் ஒரு சின்ன குறை தெரிகிறது. படத்தில் இருவருக்கும் சாதாரணமான ஆடைகள்தான். ஆடம்பரமான ஆடைகளில் த்ரிஷாவை பார்த்தவர்களுக்கும், அடிதடி பஞ்ச் வசனங்களோடு சிம்புவை பார்த்தவர்களுக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்ட கதைதான். இருந்தாலும் கௌதம் ஏற்படுத்திய இந்த மாற்றம் இருவருக்கும் ப்ளஸ்பொயின்டாகத்தான் இருக்கும்.
படத்தில் வருகிற ஒரே ஒரு சண்டை காட்சியும் அவ்வப்போது வருகிற சின்னப்பஞ்சும் சிம்பு ரசிகர்களை திருப்திபடுத்தும். சாதாரண ஆடைகளாக இருந்தாலும் த்ரிஷh செக்ஸியா(சிம்பு ஸ்டைலில்) தெரிகிறார்.
அலைந்து திரியும் காதலன் கார்த்திக் திடீரென்று காதலை சொல்வதும் பிறகு நண்பர்களாவதும் என்று வித்தியாசமாக நகரும் கதையில் சிம்புவும் த்ரிஷாவும் மனதில் நிறையும் அதே நேரம் சிம்புவுடன் அனேக காட்சிகளில் ஒளிப்பதிவாளராக வரும் கணேஷ;(படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்) தன் பங்கை சரிவர செய்திருக்கிறார். இடையிடையே இயக்குனராகவே வரும் கே.எஸ்.ரவிக்குமாரின் நக்கலை ரசிக்கலாம். கௌதம் ஸ்டைலில் தமிழ் ஆங்கிலம் கலந்த வசன நடையுன் நகரும் காதல் கதையில் விறுவிறுப்பான முதல் பாதியின் நிறைவில் ஜெஸிக்கு திருமணம் நிச்சயமாகிறது. இரண்டாவது பாதி சில இடங்களில் படம் எப்ப முடியும் என்கிற உணர்வைத்தருகிறது.
சரணம் பல்லவி என்கிற வழக்கமான இசை வடிவத்தில் மாற்றத்தை தந்த ஒஸ்கார் நாயகன் ரஹ்மானுக்கு பாராட்டுக்கள். படத்தில் டைட்டிலில் ரஹ்மான் பெயர் காண்பிக்கும் போது திரையரங்கில் இருந்த கைதட்டல் அவர் இசைக்காகவும் படம் பார்க்கிறாங்க என்பதை புரிய வைத்தது. பின்னணி இசை படத்துக்கு பக்க பலம். 'மன்னிப்பாயா', 'ஆரோமலெ', 'ஹோசானா' பாடல்கள் அற்புதம்.
தாமரையின் பாடல் வரிகள் கதையோடு பயணிக்கின்றன. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொல்லும் யேசு நாதரின் தத்துவத்தை மன்னிப்பாயா பாடலில் வித்தியாசமா சொல்லியிருக்கிறார்(கண்டுபிடிங்க).
மனோஜ்ஜின் கெமரா இயல்பாக அழகை காட்டியிருக்கிறது.
இயக்குனர் யார் என்று தெரியாமல் படம் பார்த்தாலும் முடிவில் சொல்லிடலாம் இது Film by கௌதம் மேனன் என்று.
நிறையபேர் படம் பாத்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். அதனால் இன்னும் சில முக்கிய விடயங்களை சொல்ல முடியாமல் விழுங்குகிறேன்.
''காதலை தேடிக்கிட்டு போக முடியாது...
அதுவா நடக்கணும்...
'என்னை அடிச்சுது இந்த காதல் உங்களையும் அடிக்கும்னு நினைக்கிறேன்.'
8 COMMENTS:
கருத்துரையிடுக