பதிவுலகும் ஊடகத்துறையும் நானும் (பதிவு 01)
பதிவெழுத ஆரம்பிச்ச பிறகு எனக்குள்ள கொஞ்சம் பக்குவம் தெரியுது. முன்பெல்லாம் எதெற்கெடுத்தாலும் அவசரப்படும் என்னோட புத்தி இப்போ பிரேக் அடிச்சு நின்னு நிதானமா யோசிக்க ஆரம்பிச்சிடுச்சி. நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்கும் என் ஆழ் மனதில் ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை அனுமதி வாங்கிக் கொள்கிறேன். ஒவ்வொரு பதிவும் என்னுடைய உள் மனதின் வெளிப்பாடுகள் என்பதால் என்னுடைய உள் மனது சராசரி ஒருவரின் பார்வையில் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதை பின்னூட்டங்கள் வழியாக தெரிந்து கொள்கிறேன்.
பின்னூட்டங்கள் உண்மையாக ஊட்டச்சத்துக்கள்.
ஒவ்வொரு பதிவரின் பதிவுக்கும் கிடைக்கிற பின்னூட்டங்கள் உண்மையாக ஊட்டச்சத்துக்கள். நான் பதிவெழுத ஆரம்பித்த நாட்களில் என்னை ஊக்கப்படுத்தி பதிவுலகின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் சொல்லிக்கொடுத்த பாபு, கோவி கண்ணன் மற்றும் பல நண்பர்களையும் என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் மனம் திறந்து சார்பாகவோ சார்பற்ற விதத்திலோ தங்கள் கருத்துக்களை சொல்லும் நண்பர்களுக்கும் பதிவுலகில் என்னை தொடரும் கலைக்குமார், KT.Sarangan, Ilangan போன்ற நண்பர்களுக்கும் எனது நன்றிகள். என்னுடைய பதிவுகளை பதிவுலகம் பார்ப்பதற்கு முதல் இரண்டு பேரை வட்புறுத்தி படிக்கச் செய்து கருத்தறிவதுண்டு. ஒருவர் அண்மையில் என்னுடைய சாதனையை முறியடித்த சக பதிவர் லோஷன். எனக்கும் அவருக்கும் இடையில் ஒரு போட்டி இருக்கு ஒரு நாளில் எத்தனை பேர் தளத்தை பார்வையிடுகிறார்கள் என்ற போட்டி. (மூனு பதிவெழுதி சாதனை படைத்ததையும் பதிவெழுதாம சாதனை படைத்ததையும் யாருக்கும் சொல்ல மாட்டேன். வேணும்னா லோஷனிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.) அடுத்தவர் மேடோனா அக்கானு அன்போடு அழைக்கும் அருந்ததி அக்கா. என்னுடைய பதிவுகளின் பின்னனி இது.
பதிவுகளால் நான் வருந்திய பொழுதுகள்.
சில சந்தர்ப்பங்களில் அநாதையாக பெயர் குறிப்பிடப்படாமல் வருகிற மோசமான மொழி அறிந்தவர்களின் பின்னூட்டங்கள் மனசுக்கு கொஞ்சம் கவலை தந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இருந்தாலும் நான் கவலைப்படுவதன் மூலமாக குறித்த அநாதையின் மோசமான பின்னூட்டத்தின் நோக்கத்தை நிறைவு செய்யக்கூடாது என்கிற காரணத்திற்காக மனதை தைரியப்படுத்திக்கொள்வதுண்டு. (அநாதை என்று விழித்ததற்கு காரணம் அவர்கள் பெயர் சொல்ல கூச்சப்படும் கேவலமான மொழி அறிந்தவர்கள்.) சில பின்னூட்டங்கள் குறி பார்த்து சுடுவதை போல இன ரீதியான தாக்குதல்கள். ஜம்பதை தாண்டும் என்னுடைய பதிவுகளின் முடிவில் ஒரு விடயத்தை மாத்திரம் தெளிவாக புரிந்து கொண்டேன். என்னுடைய பெயரை வைத்துதான் என் பதிவுகளுக்கு அர்த்தம் சொல்கிறார்கள் சிலர்.
சில கேவலமானவர்களின் சில பின்னூட்டங்கள் (அநுதாபம் தேடும் நோக்கத்தோடு பதியவில்லை). இவர்களுடைய ISP முகவரி Stat Counter இல் பதிவாகியுள்ளது.
அட பல பேருக்கு பிறந்த முஸ்லீம் நாய்களே....!!!
Posted by Anonymous to Hisham Mohamed at December 27, 2008 2:11 PM
கண்ணீருடன் அன்னை வானொலியின் வாசலில் நான்
பதிவுலகில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வேளை என்னோட தோழி வைதேகி (வெற்றி அறிவிப்பாளர் ரொம்ப நல்லவங்க) நான் கண்ணீருடன் அன்னை வானொலியின் வாசலில் நின்று கொண்டிருந்த கதையை சிரித்துக்கொண்டே ஞாபகப்படுத்தினாள். சந்தோசமாக ஒத்துக்கொண்டேன். ஏன் என்றால் நான் காக்கா புடிச்சோ பின்வாசல் வழியாகவோ ஊடகத்துறைக்கு வரவில்லை. இது என்னுடைய பல நாள் கனவு, உழைப்பு. இன்று நான் உழைக்கும் ஒவ்வொரு ரூபா காசும் வியர்வை சிந்தி உழைக்கிறேனோ இல்லையோ அவை என்னுடைய திறமைக்கு கிடைக்கும் சன்மானம் என்று நினைக்கிறேன்.(வியர்வை சிந்தி உழைக்கனும்னு ரொம்ப நாள் ஆசை காத்திருக்கிறேன் சந்தர்ப்பத்திற்கு)
இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் தெரிவுக்காக விண்ணப்பித்திருந்தேன். நேர்முகத்தேர்வில் பங்குபற்றுவதற்கான கடிதம் என் வீட்டுக்கதவை தட்டியது.(இன்னும் அந்த கடிதத்தை பத்திரமா வெச்சிருக்கேன்)
முதல் முறை இலங்கை வானொலிக்கு கண்டியில் இருந்து அதிகாலையில் புறப்பட்டேன். நிறைய எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் கொழும்புக்கு செல்கிறேன். சரியாக இடத்தை கண்டுபிடித்து இலங்கை வானொலியை அடைய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. வரவேற்பரையில் காத்திருந்தேன் ஒவ்வொருவராக குரல் தேர்வுக்காக போய் வருகிறார்கள். அப்போது குரல் தேர்வை நடத்தும் மூத்த அறிவிப்பாளர் ஒருவர் வெளியில் வந்தார். அவரிடம் நடந்ததை சொல்லி கடிதத்தை காட்டினேன்;. அவர் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் பல கனவுகளோடு வந்த எனக்குள் ரிச்டரில் கூட அளக்க முடியாத அளவு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ''எங்க படுத்து கெடந்துட்டு வாறிங்க. வெளியில போ உனக்கெல்லாம் வாய்ப்பு தர முடியாது''. என்று சொல்லிவிட்டார். கெஞ்சிக்கேட்டேன் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. நான் தாமதித்து வந்திருக்க கூடாது அதற்கான உண்மையான காரணத்தை அவர் ஏற்றுக்கொள்ளாதது பெரும் வேதனை அளித்தது. ஒரு வேளை அரசியல்வாதியின் கடிதம் இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரோ என்னவோ. இலங்கை வானொலிக்கு முன்னால ஒரு மாமரம் இருக்கு அதுக்கு கீழ நின்னுகிட்டிருந்தேன்(இன்றும் அந்த மாமரத்த பார்த்தால் எனக்கு அந்த ஞாபகம் வரும்). வீட்டில் இருந்து புறப்படும் போது கண்ட கனவுகள் எல்லாம் ஒவ்வொன்றாக என்னை கேலி செய்த வேதனை என்னை அறியாமலேயே கண்ணீரை வர வச்சிடுச்சி. அப்போ அந்த வழியா இரண்டு பேர் தமிழ்ல கதைச்சுகிட்டு வந்தாங்க யாருன்னு தெரியல இதுக்கு முதல்ல பார்த்ததும் இல்ல. கண்ணீரில் மூழ்கிப்போன என்னிடம் வந்து எதுக்காக அழுறீங்கன்னு விவரம் கேட்டாங்க நடந்ததயெல்லாம் சொன்னேன். ஒருத்தர் திரு ஜெயக்கிருஷ;ணா மற்றவர் திரு சந்திரமோகன் ரெண்டு பேரும் மேல் அதிகாரிகளோட கதைச்சு நேர்முகப்பரீட்சையில் தோற்ற எனக்கொரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தாங்க. நம்பிக்கையோடு முகம் கொடுத்தேன் நடந்த மூன்று கட்ட தெரிவிலும் அதிக புள்ளிகளை பெற்று முதலாவதாக தெரிவானேன். அதற்கு பிறகு பலரும் சோதனைக்காலமாக நினைக்கும் பயிற்சிக்காலம். இலங்கை வானொலியில் வந்த உடனே ஒலி வாங்கியை கையில கொடுத்து அறிவிப்பு செய்யச் சொல்ல மாட்டாங்க அதற்கு பல படிமுறைகள் இருக்கு. 7 மாத கால பயிற்சி............................
பயிற்சியின் தொடர்ச்சி நேரம் கிடைக்கும் போது அடுத்த பதிவில்....
தொடரும்.
14 COMMENTS:
கருத்துரையிடுக