பாத்திரம் நிரம்ப பால்...
ஒரு ஏழைச்சிறுவன் பாடசாலை செல்வதற்காய் வீடு வீடாக தன் தாய் தயாரித்து தரும் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தான். விற்பனை நிறைவுக்கட்டத்தில் பசி அவன் வயிற்றை கிள்ளியது.
எதிரே தென்பட்ட வீட்டில் பசிக்கு ஏதேனும் உணவு கேட்க நினைத்து கதவை தட்டியவன் உணர்விழந்து போனான். அங்கே ஒரு அழகான பெண் கதவை திறந்து நின்றுகொண்டிருந்தாள். பசிக்கு உணவு கேட்க வந்தவன் தடுமாறி கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமான்னு கேட்டான். வந்தவன் பசியால் வாடியிருந்ததை உணர்ந்தவள் ஒரு பெரிய பாத்திரத்தில் பால் கொடுத்தாள். நிதானமாக குடித்து முடித்தவன்.
''நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்'' என்றான்.
அதற்கு அந்த கிராமத்து பெண் '' நீங்கள் எனக்கு கடன் பட வேண்டியதில்லை. எப்பொழுதும் கருணைக்கு சம்பளம் பெறக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க'' என்று பதில் சொன்னாள்.
''அப்போ என்னுடைய இதயப்பூர்வமான நன்றியையாவது ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டான்.
தொடந்த அந்த ஏழைச்சிறுவனின் கடின உழைப்பும் படிப்பும் ஒரு பெரிய நகரத்தில் பிரபல வைத்தியர் என்கிற அந்தஸ்தை அவனுக்கு கொடுத்தது.
ஒரு சில வருடங்களுக்கு பிறகு. அந்த கிராமத்து பெண் சுகவீனமுற்றாள். கடும் முயற்சிக்கு பிறகு கிராமத்து வைத்தியர்கள் சிகிச்சையளிப்பதை கைவிட்டுவிட்டனர். அரிய வகை நோயக்கு தகுந்த சிகிச்சையை நகரத்தில் தேர்ந்த ஒரு வைத்தியரிடம் பெற்றுக்கொள்ளுமாறு அவள் அறிவுறுத்தப்பட்டாள்.
அவசரமாக நகரத்தின் பிரபல வைத்தியரிடம் அழைத்துச்செல்லப்பட்டாள் அந்த பெண்.
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரு நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாய் குறித்த வைத்தியருக்கு தகவல் சொல்லப்பட்டது. நோயளியின் முகவரியை பார்த்தவர் சிகிச்சைக்காக விரைந்தார்.
தன் பசிக்கு பாத்திரம் நிரம்ப பால் கொடுத்த அந்த கிராமத்து பெண்தான் அவள் என்பதை பார்த்த பார்வையில் உணர்ந்து கொண்டார். அவளை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு பல நாட்களாக கடுமையாக போரடிய வைத்தியர் வெற்றிபெற்றார்.
இறுதியாக அந்த பெண்ணின் சிகிச்சைகளுக்கான செலவுப்பட்டியல் வைத்தியரின் அனுமதிக்காக வந்தது. அதைப்பார்த்தவர் அந்தப்பட்டடியலின் அடியில் ஏதோ எழுதி கையொப்பமிட்டு அனுப்பி வைத்தார்.
கிராமத்து பெண்ணிடம் அந்த பட்டியல் கொடுக்கப்பட்டது. '' என் வாழ் நாள் முழுவதும் உழைத்தாலும் இதை என்னால் கட்ட முடியாது'' என்று தனக்குள்ளே நினைத்துக்கொண்டு அதை திறந்தாள்.
அவள் கண்ணில் முதலில் பட்டது அந்த பட்டியலின் அடிப்பகுதியில் வைத்தியரின் கையொப்பத்துடன் அடிக்கோடிட்டு எழுதப்பட்ட அந்த சொற்கள்தான்.
''முழுமையாக செலுத்துங்கள், ஒரு பாத்திரம் நிரம்ப பாலை ஊற்றி''
சந்தோசம் அவள் கண்களை மூழ்கடிக்க தெளிவான இதயத்தோடு ''நன்றி இறைவா, உன் அன்பை மனித மனங்களில் பரப்பச்செய்'' என்று வேண்டிக்கொண்டாள்.
சுவரை நோக்கி வீசிய பந்து மீண்டும் நம்மை வந்தடைவது போல நாம் செய்யும் எல்லா நல்ல செயல்களுக்கும் என்றோ ஒரு நாள் பலனை பெறுவோம். பலன் கிடைக்காவிட்டால் உலகை அழகுபடுத்தியதற்காய சந்தோசப்படுவோம்.
இந்த உலகை அன்பு மட்டும் ஆளட்டும். கொடிய யுத்தமில்லாத உலகிற்காய் பிரார்த்திப்போம்.
விரோதி புதுவருடத்தை கொண்டாடுபவர்களுக்கு என் புத்தாண்டு வாழ்தத்துக்கள்.
3 COMMENTS:
கருத்துரையிடுக