என் கண்மணி உன் காதலி

AM 12:28 Hisham Mohamed - هشام 10 Comments



சில சமயம் நாம் வாசிக்கும் விடயங்கள் நம்மை சிந்திக்க வைப்பதுண்டு... அதை நம் இதயத்தில் இருக்கும் பலரோடும் பகிர்ந்து கொள்ளவும் நாம் மறப்பதில்லை... அதுபோல நம் இதயத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு காதல் கதை...

கண் தெரியாத ஒருத்தி தன் வாழ்க்கையை வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தாள். அவள் வெறுக்காதவை எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அவள் இந்த உலகத்தில் அன்பு வைத்தது தன் காதலனிடம் மட்டும்தான். அவன் எப்போதும் அவளுக்காகவே வாழ்கிறவன். அவன் விடுகிற ஒவ்வோரு மூச்சும் இவள் பற்றிய சிந்தனையாகத்தான் இருக்கும்.

ஒரு நாள் பார்வையிழந்த அந்த பெண் தன் காதலினிடம் ''எனக்கு மட்டும் பார்வை இருக்குமென்றால் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்'' என்றாள்.

பல நாட்கள் கடந்த இந்த காதல் பயணத்தில் ஒரு முறை யாரோ ஒருத்தர் இவள் பார்வைக்கு கண்களை தானமாக கொடுத்திருந்தார்.

இப்பொழுது அவள் இந்த உலகத்தையே பார்க்கிறாள். அவள் இதயக்கூட்டில் இருக்கும் காதலனை தன் இரு கண் கொண்டு பார்க்கிறாள்.

இந்த உலகத்தை விட தன்னை நேசித்த காதலியிடம் காதலன் ''இப்போ உனக்கு பார்வை வந்துடுச்சி என்னை கல்யாணம் கட்டிக்கிறியா'' என்று கேட்கிறான். திடுக்கிட்டுப்போன காதலி ''கண் தெரியாத உன்னை நான் கல்யாணம் கட்டுவதா? எப்படி சாத்தியப்படும்? '' என்று கோபத்தோடு பதில் சொன்னாள்.

நொறுங்கிய இதயத்தோடு அவன் எழுதிய கடிதத்தின் அடியில்...

''உனக்குள் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிற சந்தோசத்தோடு விடை பெறுகிறேன். என் கண்களையாவது கவனமாகப்பார்த்துக்கொள்.''


வாழ்க்கையின் படிநிலைகள் மாறி உயர்வு பெறும் போது மனித மனங்களும் மாறுவதில்லையா? 
எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம் கடந்த பாதையை? 
வருத்தங்களில் எம் கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள் எங்கே?


(இப்போது இவளை உலகம் தெரியாதவள் அல்லது கண் தெரியாதவள் என்பதை விட குருடி என்றழைப்பது பொருத்தமென்று ராமசாமி அண்ணே சொல்லச்சொன்னாரு.)

சுதந்திர இந்தியாவின் மானம் நிவ்யோர்க் ஏலத்தில்

PM 10:48 Hisham Mohamed - هشام 4 Comments



சுதந்திரத்தை பார்த்த கண்ணாடிகள் மீண்டும் தாயகத்துக்கு

இந்தியாவின் நாணயம் தொட்டு பல விடயங்களில் தேசிய சொத்தாக போற்றப்படும் காந்தி பாவித்த கண்ணாடி, கடிகாரம், இறுதியாக உணவருந்திய தட்டு இவை இந்தியாவின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்க தலைநகர் நிவ்யோர்க்கில் ஏலத்தில் விடப்பட்டது.

எதிர்ப்புகளை சமாளிக்க ஏலம் கைவிடப்பட்டதாக அறிவித்திருந்தும். குறித்த திகதியில் ஏலத்தை நடத்தியது ஏல நிறுவனத்தின் சாமர்தியம்.

உலகின் பல நாடுகளில் இருந்தும் பலர் வருகை தந்திருந்தனர்.

அகிம்சையை போதிக்க இப்படி ஒரு வழிமுறையை அமெரிக்காவை தவிர யாரால் கையாள முடியும்.

பொருளாதாரம் சரிந்து விழுகிற தருவாயிலும் இவர்கள் மீசையில் மண் ஒட்டாது பாருங்கோ. சரிந்ததை நிமிர்த்துவதற்கான வழியாக கூட இது இருக்கலாம்.

காந்தியின் பொருட்கள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன.

அதை வாங்கியவர் இந்திய பணக்காரர் விஜய் மல்லய்யா என்பதில் இந்தியா பெருமைக்கொள்ளலாம். அவற்றை அவர் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்போவதாக சொல்லியிருக்கிறார்.(இல்லாட்டி விட்டுருவாங்களா)

இந்த ஏலம் இன்னும் இரண்டு வாரங்களில் முழுமைபெறும். அதுவரை சட்ட சிக்கல்கள் பிச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

காந்தி தன் கண்ணாடியை இந்திய இராணுவ வீரரான தீவான் நவபின்னுக்கு 1930களில் பரிசளித்திருந்தார். இதை பரிசளிக்கும் போது காந்தி ''இதுதான் சுதந்திர இந்தியாவை எனக்கு காட்டியது'' என்று சொல்லியிருந்தாராம்.

ஸெனித் கடிகாரம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பரிசாக கொடுத்தது.

காந்தி தன் கைகளால் உருவாக்கிய செருப்பை இந்திய சுதந்திரத்துக்காக லண்டன் வட்ட மேசை மாநட்டில் கதைக்க சென்ற பிரிட்டிஷ் இராணுவ வீரருக்கு பரிசாக கொடுத்தார்.


காந்தியின் சொத்தை விற்றது யார்?

இருளில் ஓர் இரவு

PM 10:35 Hisham Mohamed - هشام 5 Comments

இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதில் ஆயிரம் கேள்விகள் எனக்குள்.



மின்சாரம் துண்டிக்கப்ட்டால் கொழும்பு வாழ்க்கை பரபரப்பாவது பழக்கப்பட்டுவிட்டது.

அந்த தாயும் தந்தையும் என் வீட்டு முற்றத்தில் இருந்த மரத்தின் அடியில் பாசத்திற்காய் தவித்ததை அந்த மரம் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. (மனிதர்களே உணராத போது மரங்கள் என்ன விதிவிலக்கா)

மறக்க முடியாத அந்த இரவு

இறுதியாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது என் வீட்டு முற்றத்தில் நடந்த சோகமான சம்பவத்தால் இன்னுமொரு மின்சார தடையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. (இன்னும் பல பகுதிகள் மின்சாரம் இருந்தும் இருளில்)

அன்றிரவு வீட்டின் மொட்டை மாடியில் தொலைபேசியில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்த போது திடீரென நகரெங்கும் இருள் வானெங்கும் பெரும் இரைச்சலுடன் சிவப்பொளிகள்.

கொழும்புக்கு இது புதியது என்பதால் வேடிக்கை பார்த்தவர்கள் பலர். அதில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நானும் அம்மாவும் வீட்டு வாசலில், முற்றத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் என ஏராளம் பேர்.

பேரீரைச்சலுக்கு மத்தியில் வானத்தை அண்ணாந்து பார்த்தவள் இரத்தம் சிந்தி நிலத்தில் விழ மரத்தடியெங்கும் மனிதம் சிந்திக்கிடந்தது.

ஜயோ என்ற ஓலத்துடன் கத்திய சகோதரியின் குரல் அடங்கு முன் அந்த 14 வயது சிறுமி விடைபெற்றுக்கொண்டதை பெற்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவள் ஒரு நாள் கழித்து பிணமாக வீடு வந்தாள்.

அன்றிரவு பல மணி நேரத்திற்கு பின் ஒரு குடும்ப விளக்கை அணைத்து மின்சாரம் தந்தது இருள்.

விடை தெரியாதா கேள்விக்கு இன்னும் எத்தனை பேர் பலியாகப்போகிறார்கள்.

இது எந்த மொழிக்கும் இனத்துக்கும் சார்பான பதிவல்ல. நான் கண்டதை பதிகிறேன்.(காணாதது எத்தனையோ)

மனிதர்கள் கவசங்களல்ல, பலிகடாக்களல்ல.
என் தேசம் யாருக்கும் சாபமுமல்ல.......